பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நல்லாட்சியின் ஐம்பெரும் வேலைத்திட்டம்

 “எனக்கான மாளிகையை அமைப்பது எனதும் நோக்கமல்ல நாட்டு மக்கள் அனைவரதும் வீடுகளை மாளிகையாக்குவதே எமது நோக்கமாகும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘எனக்கான எதிர்காலத்தையன்றி உங்களது எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என குறிப்பிட்ட பிரதமர் புதிய புரட்சியை நாட்டில் ஏற்படுத்தி சுபீட்சத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

நூறு நாள் வெற்றியையடுத்து 60 மாதப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், பெரும்பான்மைப் பாராளுமன்றத்தை அமைத்து நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நல்லாட்சிக்கான 60 மாத வேலைத்திட்டமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரகடனம் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இதற்கான விசேட நிகழ்வு நடைபெற்றதுடன் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களுக்கு அதனை பிரதமர் வழங்கி மேற்படி வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சியையடுத்து 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும் 60 மாதத் திட்டமான ஐம்பெரும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள் ளோம். இது தேர்தல் விஞ்ஞாபனமல்ல. நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம். இதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றோம்.

புதிய அரசியல் கலாசாரத்தோடு மக்களுக்கு பிரதிபலன்களைத் தரக்கூடிய அரசியல் செய்வதே எமது நோக்கம்.

இதனால் இந்த வேலைத்திட்டம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. இத்திட்டத்தை அவதானித்து அதற்கிணங்க தீர்மானமெடுத்து ஆதரவளிக்குமாறு கேட்கிறோம்.

இது நாம் ஆரம்பித்துள்ள புரட்சி. இதற்கு மக்கள் ஆணை கிடைத்தவுடன் புதிய பாராளுமன்றத்தை அமைத்து அரச தரப்பு அமைச்சர்கள் மட்டுமன்றி முழு பாராளுமன்றமும் இணைந்ததாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.

இத்திட்டம் தொடர்பில் மக்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் போன்றவற்றை செவிமடுக்க நாம் தயாராயுள்ளோம். இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பரிசீலனை செய்யும் பொறுப்பும் பாராளுமன்றத்திற்கு உள்ளது.

நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும். இதற்கிணங்க முழு பாராளுமன்றத்தையும் இணைத்துக் கொண்டு இணைந்த ஆட்சியொன்றுக்கு நாம் செல்லவுள்ளோம்.

‘வெஸ்மினிஸ்டர்’ முறைமையோடு இது முன்னெடுக்கப்படும். நாட்டை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக நான் இதனைக் கருதுகின்றேன்.

இந்த வேலைத்திட்டம் அரசியல் கட்சி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. குறிப்பாக சிவில் அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தனியான ஒரு ஆலோசனை சபை அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

அதனோடிணைந்ததாக கிராமிய மட்டத்தில் ஏற்படுத்தப்படும் கொத்தணிக் கிராமங்கள் தொடர்பில் நிர்மாணிப்பது அரசியல்வாதிகளல்ல. கிராமிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிவில் அமைப்புக்களே.

நாம் கட்சி அரசியலுக்கு இதனை மட்டுப் படுத்துவதன்றி மக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாம் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து அதனை நிறைவு செய்த பின் 60 மாதத் திட்டத்தினை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இது எமது இரண்டாவது செயற்திட்டம். அன்று ஜனவரி 8 ஆம் திகதி புரட்சிக்காக எம்மோடிணைந்த அனைவரும் மீள் ஒன்றிணைந்து மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய புரட்சியை ஏற்படுத்துவதே எமது இலக்கு.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் மேற் கொண்ட செயற்பாடுகளைச் சாதகமாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேன முன்னின்றார். அவரது தலைமையில் நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் தம்மிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தையும் மட்டுப்படுத்த இணக்கம் தெரிவித்தார்.

அதனையடுத்து இப்போது நாம் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய பாராளுமன்றத்தை அமைப்பதே தேவையாகவுள்ளது. நாம் அனைவரும் இணைந்து அதற்காக போராட வேண்டி யுள்ளது.

நாம் முன்னேற்றத்தை நோக்கி நாட்டை முன்னெடுக்கையில் அதற்கெதிரான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த எதிர்ப்பை வெற்றிகொள்ள நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். நாம் ஓரணி சேர்ந்து அதனை வெற்றிகொள்வது அவசியமாகிறது.

தேர்தல் காலங்களில் எமக்குப் புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் நாம் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி மூலம் தேர்தலை வெற்றி கொள் வோம். அதன் பின்னர் புதிய இணக்கப் பாட்டுடன் நாம் கலந்துரையாடி செயற்பட முடியும்.

புதிய சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். பல வருடங்களாக சமூக மயம் மக்கள் மயம் என தொடர்ந்து எதிர்காலத்தில் எமக்கு புதிய வர்த்தக மயத்துடன் முன்னேற வேண்டியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு சமூக உரிமைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல், வருமானத்தை அதிகரிப்பது, ஊழல் மோசடிகளை ஒழிப்பது, சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது என நாட்டில் அனைத்து இன சமூகங்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.

இதுவே எமது புரட்சி. இதனையே எதிர்காலத்திற்காக முன்னெடுக்க வேண்டி யுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்றத்தையும் இணைத்துக்கொண்டு உள்ளூராட்சிச் சபைகளின் பங்குபற்றுதலுடன் முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் புரட்சி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ரஜபக்ஷவின் ஆட்சியோடு ஒப்பிடுகையில் இது பாரிய மாற்றமாகும். குடும்ப ஆட்சியல்ல. மக்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை கொண்டு புதிய பாதையில் பயணிப்போம்.

பழைய வழிகள் சாத்தியமற்றுப் போயின. புதிய பாதையில் பயணிக்க மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும். ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து யானைச் சின்னத்தை மக்கள் அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். எமக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத் தந்து எமது வேலைத்திட்டத்தை அங்கீகரியுங்கள். வாதப்பிரதிவாதமின்றி ஏனையோரையும் இணைத்துக்கொண்டு நாம் பயணத்தை முன்னெடுப்போம்.

எனக்கு ராஜமாளிகை அமைப்பது எமது நோக்கமல்ல. உங்கள் அனைவரதும் வீடுகளை மாளிகையாக்குவதே. உங்கள் வயல், நிலப் பரப்புக்களை ராஜ தானியாக்குவோம்.

எனது எதிர்காலத்தை உறுதிப்படுத்துவ தல்ல, உங்கள் அனைவரதும் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதே. அரச குடும்பத்தை உருவாக்குவது எனது நோக்கமல்ல. அனைத்து குடும்பங்களையும் அரச குடும்பங்களாக்குவதே எனது நோக்கம். ஆகஸ்ட் 17 ஆம் திகதி புரட்சியை ஆரம்பிக்க அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தை வெற்றியீட்டச் செய்வோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...