கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நாளை முதல் பணம் மீள்செலுத்தப்படும் | தினகரன்

கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நாளை முதல் பணம் மீள்செலுத்தப்படும்

கோல்டன் கீ கடனட்டை கம்பனியில் வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களின் பணம் நாளை முதல் மீளளிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோல்டன் கீ வைப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய குறித்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த மீள்செலுத்தும் திட்டம், கடந்த வாரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

அதன்படி தங்களது கணக்கில் 2 மில்லியன் ரூபா வரையான வைப்பைக் கொண்டவர்களுக்கு ஜூலை 24 இலிருந்து ஒரு மாதத்தினுள் அவர்களது பணம் மீளச் செலுத்தப்படும் என நிதியமைசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த உச்சநீதிமன்றம் முதற்கட்ட மீளளித்தல் நடவடிக்கைகளுக்காக திறைசேரி ரூபா 544.3 மில்லியனை வழங்கவும், அப்பணத்தை கோல்டன் கீ கம்பனிக்கு சொந்தமான சொத்துகளிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளவும அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் வைப்பாளர்களின் சேமிப்பின் 41 வீதத்தை செலுத்துமாறு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இவ்வாண்டு ஜனவரியில் அனைத்து வைப்பாளர்களுக்கும் வைப்பாளர்களின் வைப்பைக் கருத்திற்கொள்ளாது ரூபா 3 இலட்சம் பணம் கோல்டன் கீ நிறுவனத்தால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ரூபா 10 மில்லியனுக்கு குறைவான வைப்பாளர்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள்ளும் அதற்கு மேற்பட்ட தொகையைக் கொண்டுள்ளோருக்கு ஒரு வருடத்தினுள்ளும் பணம் மீளளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கென மேலதிகமாக ரூபா 7 ஆயிரம் மில்லியன் அவசியம் எனவும் அதனை கோல்டன் கீ கம்பனியின் சொத்துகளை கலைப்பதன் மூலமும் மத்திய வங்கியிலிருந்து செலுத்தப்பட்ட இலாபத்திலிருந்தும் மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளார் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...