75 சையனைட் குப்பிகளுடன் முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் கைது

இந்தியாவின் ராமநாதபுர பொலிஸாரினால் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் கைதுசெய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள உச்சிப்புளி சோதனைச் சாவடியில் பொலிஸார் நேற்றிரவு (20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கார் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான மூவரை கைதுசெய்துள்ளனனர்.

இதன்போது இவர்களிடம் 75 சையனைட் குப்பிகள், 300 கிராம் சையனைட், 4 ஜீ.பி.எஸ் உபகரணங்கள், 7 மொபைல் போன்கள் என்பன காணப்பட்டுள்ளதோடு பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்தியப் பணம் 46,200 ரூபாய்களும், இலங்கைப் பணம் 19,300 ரூபாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் 39 வயதான கிருஷ்ணகுமார் என்பவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், 1990களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார் எனவும் 2009 இல் இந்தியா வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதுபோல், ஆர். சசிகுமார் (25) மற்றும் என். ராஜேந்திரன் (44) ஆகிய இரு இந்தியர்களும் இவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குறித்த இலங்கையரை மதுரை பஸ் நிலையத்திலிருந்து உச்சிப்புளிக்கு கார் ஒன்றின் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

திருச்சியிலுள்ள, கே கே நகர் பொலிஸ் நிலையத்தில் இவரை பதிவு செய்து அகதி முகாமிலிருந்து வெளியே தங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விடுதலைப்புலிகளின் தொடர்பில் உள்ளதாகக் கூறப்படும் இவ்விருவரும் குறித்த நபரை கடல் வழியாக யாழ்ப்பாணம் அனுப்பவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இன்று காலை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


Add new comment

Or log in with...