3 வயது குழந்தையின் எலும்புக்கூடு வயலில் மீட்பு | தினகரன்

3 வயது குழந்தையின் எலும்புக்கூடு வயலில் மீட்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு எனும் பகுதியில் காணாமல் போன மூன்று வயது சிறுமியினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் நேற்று (19) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறுமி காணாமல் போன தினத்தன்று அணிந்திருந்த ஆடை அந்த இடத்தில் காணப்படுவதனால் அது சிறுமியினுடைய எலும்புக்கூடு எச்சங்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்தே அந்த எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறுமி காணமால்போன தினத்திலிருந்து பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.3 வயது குழந்தையின் எலும்புக்கூடு வயலில் மீட்பு

மீட்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்கள் காணாமல்போன சிறுமியினுடையதா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரம் எனும் பகுதியை சேர்ந்த உதய குமார்  யர்சிகா  எனும் சிறுமி கடந்த ஜூனட மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்தார்.

சிறுமியும் தாயாரும் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக அன்றைய தினம் நடந்து சென்றுள்ளனர்.

அந்த நேரம் அவ் வழியாக துவிச்சக்கர வண்டியில் வந்த சிறுமியின் அண்ணனுடன் சிறுமியை தாயார் ஏற்றி வாய்காலுக்கு அருகில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.

சிறுமியின் அண்ணனும் துவிச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று வாய்க்காலுக்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளார். தாயார் வாய்க்கால் பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுமியை காணவில்லை.

அதனையடுத்து சிறுமியின் தாயாரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதேவேளை காணாமல் போன சிறுமியை காடேறி எனும் அமானுஷ சக்தி ஒன்று கடத்தி சென்றுள்ளதாகவும் அக்கிராமத்தை சேர்ந்த பல நம்பி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...