பாலத்தின் மீது தடம்புரண்ட புகையிரதம்; மலையக தபால் சேவைகள் இரத்து | தினகரன்

பாலத்தின் மீது தடம்புரண்ட புகையிரதம்; மலையக தபால் சேவைகள் இரத்து

 
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் புகையிரதம் விபத்துக்குள்ளானது.
 
 
இதன் காரணமாக இன்று (13) மலையக தபால் சேவை புகையிரதங்கள் இரண்டும் இடம்பெறாது என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
 
 
கொழும்பிலிருந்து நேற்று (12) இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
குறித்த விபத்தின் காரணமாக புகையிரதத்த்தின் 4 பெட்டிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், புகையிரத பாலமும் உடைந்துள்ளது.
 
இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை ரயில் பாதை தண்டவாளங்களும் சேதத்திற்குள்ளாகின.
 
 
இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
புகையிரத பெட்டியின் பாகங்கள் இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன.
 
 
இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் ஹட்டன் வரையும் பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
 
கொட்டகலை வரை பயணிக்கும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையை முழமையாக வழமைக்கு கொண்டு வர சில நாட்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
(ஹட்டன் சுழற்சி, விசேட நிருபர்கள்)
 
 

Add new comment

Or log in with...