மஹிந்தவின் மீள் வருகையால் மட்டுமே சு.க வெல்லாம் என்பது வெறும் மாயை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை மூலம் மட்டுமே சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட முடியும் என்பது வெறும் மாயை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரும் கட்சியின் வெற்றிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவமின்றி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனவும் குறிப்பிட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் எம்.பி, திலங்க சுமதிபால ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் சு. க. வினூடாக போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ இதுவரை கோரிக்கை விடவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள் சகல தரப்பினரையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம,

ஏதும் கட்சியினுள் பிளவு ஏற்பட்டால் கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சி இருக்கும். ஏனென்றால் அடுத்த தேர்தலில் தங்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதே அந்த மகிழ்ச்சியாகும். எம்.பிகள் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் மாகாண சபை உறுப்பினர்கள், அமைப் பாளர்கள், கற்றவர்கள் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்காது.

இம்முறை சு. கவினூடாக போட்டியிட அநேகர் ஆர்வமாகவுள்ளனர். எதற்கும் முகம் கொடுக்க தயாராக இருக்கிறோம். எமது கட்சி உடையவில்லை. கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் காணப்படுகின்றன. புதிய கருத்துணர்வுடன் கட்சியை முன்னேற்ற வேண்டும்.

ஒன்றாக இணைந்து செயற்படுவது குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எமது குழு ஐ. ம. சு. மு. விலுள்ள 17 கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. இதன் அடிப்படையில் தயாரித்த 18 அம்சங்கள டங்கிய எமது அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம்.

ஐ. தே. க.வை தோற்கடித்து மீண்டும் ஐ. ம. சு. மு. ஆட்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால வழிநடத்துவார். சிறுபான்மை கட்சிகள் எந்த தலைமைத்துவத்தின் கீழ் போட்டி யிட்டால் சாதகமாக இருக்கும் என யோசனை முன்வைத்துள்ளன.

அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல மாற்றுக் கருத்துகள் காணப் படுகின்றன. அவ்வாறான ஒரு மாற்றுக் கருத்தையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

முதற் தடவையாகவே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எந்தக் கட்சியும் வேட்புமனு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை. எந்த தேர்தலிலும் மும்முனை போட்டியிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த ராஜபக்ஷ கட்சியிடம் விண்ணப்பிக்க வில்லை என்றார்.

அமைச்சர் அமரவீர அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியதாவது,

20 ஆவது திருத்தத்தை அடுத்த தேர்தலின் பின்னராவது நிறைவேற்ற ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.

அடுத்த பாராளுமன்றத்திற்கு சிறந்த குழுவொன்றை அனுப்ப மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகளும் எமக்கு கிடைக்க இருக்கிறது. ஐ. ம. சு. மு.வை வெற்றிபெற வைக்க முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை யில் போட்டியிடுவதனால் எனது தேர்தல் தொகுதியை வழங்குவதில் பிரச்சினை கிடையாது. கட்சி முடிவு செய்தால் அதனை வழங்கலாம் என்றார்.

திலங்க சுமதிபால முன்னாள் எம்.பி. திலங்க சுமதிபால கூறியதாவது,

இடதுசாரி கட்சிகள், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளன. பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ கோரவில்லை. சில கட்சிகளே இவ்வாறு கோரின.

அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்தால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என சிறு மற்றும் இடதுசாரி கட்சிகள் கருதுகின்றன.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்து வமின்றி வெற்றியீட்ட முடியும் என எவரும் கருத்து கூறவில்லை. 6 மாதங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜ பக்ஷ குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன.

கடந்த தேர்தலில் ஏன் தோல்வியடைந்தோம் என சிந்திக்க வேண்டும். தமது தவறுகளை திருத்த வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் வருகை மட்டுமன்றி நாம் வெல்வதற்கு பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அவரின் வருகை மட்டுமே வெற்றிபெற ஒரே வழி என்பது அரசியல் லாபத்திற்காக கூறப்படும் கூற்றாகும் என்றார்.

எம். எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...