பொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து திரும்பிச் சென்ற பொது பல சேனா | தினகரன்

பொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து திரும்பிச் சென்ற பொது பல சேனா

பொது பல சேனா உட்பட பல பேரினவாத அமைப்புக்கள் இணைந்து ஞானசாரதேரர் தலையில் நேற்று (03) சனிக்கிழமையன்று மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரணி மட்டக்களப்பு – பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிசாரினால் வழிமறித்து இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்தில் பதற்றநிலை நிலவியது.

இதனால் அவர்கள் அவ்விடத்தில் வீதியினை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் மாலை பொலிசாரின் தடையையும் மீறி பொலிசாரின்  தடைகளை உடைத்து மட்டக்களப்பு  நோக்கி தமது பயணத்தினை கால்நடையாக மேற்கொண்டனர்.

இதேவேளை பிரதேசத்தில் இருள் சூழ்ந்த காரணத்தினால் புணானை ஸ்ரீ பஞ்சமா விகாரையில் தங்கியிருந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பொலிசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து அன்றைய தினம் நல்லிரவு வேளை பயணத்தினை புணானை வரை இடைநிறுத்தி விட்டு தங்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து நேற்று (03) காலை முதல், தடைப்பட்டிருந்த  கொழும்பு - மட்டக்களப்பு புகையிரத சேவை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பின.

இதனையடுத்து பொலிசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பின.

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டரீதியற்ற ஓன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை வழங்குமாறு கரடியணாறு பொலிசார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றுக்கு மனுவொன்றை சமர்ப்பித்தமையினையடுத்து பொலிசாரின் வேண்டுதலுக்கு அமைய குறித்த ஒன்று கூடடலைத் தடுக்கும் தடை உத்தரவினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

(பாசிக்குடா நிருபர் -  கே. ருத்திரன்)

இதேவேளை இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற எமது ஊடகவியலாளர் க. ருத்திரன் உடல் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு மீடியா அடையாள அட்டை கேட்டு விசாரிக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கும் பொது பல சேன அமைப்பு இளைஞர்களால் தடை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...