துமிந்தவின் FB கணக்கை அவரது தங்கை கையாள்வது சரியா? | தினகரன்

துமிந்தவின் FB கணக்கை அவரது தங்கை கையாள்வது சரியா?

 

றிஸ்வான் சேகு முகைதீன்

துமிந்தவின் பேஸ்புக் கணக்கை நானே இயக்குவதாக அவரது தங்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது தூக்கு தண்டனை கைதியாகவுமுள்ள துமிந்த சில்வாவின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவது தொடர்பில் இன்று (01)  டெய்லி நியூஸ் (Daily News) மற்றும் தினிமின பத்திரிகைகள் வெளியிட்டிருந்த  சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் துமிந்த சில்வாவின் தங்கையான திலிணி சில்வா, இவ்வாறு குறித்த பேஸ் புக் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் பற்றிய தெளிவு இல்லாதவர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பேஸ் புக் பக்கத்தை இயக்குவதற்கு விரும்பியவர்களை நியமிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆயினும் பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படும் தனிநபர் தொடர்பான பக்கத்திற்கே அவ்வாறான அனுமதி உண்டு என்பதோடு, வேறொருவரின் தனிப்பட்ட கணக்கை இயக்குவதற்கு அவ்வாறான அனுமதி இல்லை எனவும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத் துறையின் முன்னாள் பீடாதிபதியான கலாநிதி பிரதீபா மகநாமகாஹேவ எமக்கு விளக்கமளித்தார்.

குறித்த  பேஸ்புக் கணக்கு இரு வழிகளில் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கும் கலாநிதி பிரதீபா மகாநாமஹேவ, சிறையினுள் பேஸ்புக் கணக்கை இயக்குவதற்கான சாதனம் ஒன்று துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அது சட்டத்திற்கு முரணானதாகும். 

அல்லது குறித்த பேஸ்புக் கணக்கு மற்றுமொருவரால் இயக்கப்படலாம். அவ்வாறு இயக்கப்படுமாயின் அதில் வழங்கப்படும் தகவல்கள் குறித்த நபர் வழங்கும் தகவலாக இருக்க வேண்டும் அவ்வாறில்லை எனில் அவரது ஒப்புதலை அடுத்தே அத்தகவல் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும். ஆயினும் வெளி உலக தொடர்பு அற்ற மரண தண்டனைக் கைதிக்கு அவ்வாறான ஒப்புதலை எவ்வழியின் ஊடாக வழங்க முடியும் எனும் கேள்வி எழுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு குறித்த கணக்கின் ஊடாக வழங்கப்படும் தகல்கள் குறித்து குறித்த நபரே பொறுப்பாளியாக கருதப்படுவார் என்பது மற்றுமொரு விடயம் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...