லேக் ஹவுஸ் ரூ. 150 மில். இலாபத்தில்; 200 மில். ஆக அதிகரிக்க திட்டம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

- ரூபவாஹினியின் ரூபா 374 மில்லியன் கடன்சுமை ரூபா 102 மில்லியனாக குறைப்பு...

- நேத்ரா தனி அலைவரிசையாக தமிழில்...

- ITN TV, ITN FM, ITN Web ஒரே பரிபாலனத்தின் கீழ் கொண்டு வந்து செலவு குறைப்பு... 

லேக் ஹவுஸின் கடன் சுமை குறைக்கப்பட்டது மாத்திரமல்லாது, அது  தற்போது ரூபா 150 மில்லியன் இலாபமீட்டும் நிறுவனமாகவும் மாறியுள்ளது. இவ்வருட இறுதியில் அதனை ரூபா 200 மில்லியனாக அதிகரிக்கவும் எதிர்பாரக்கின்றோம் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2017 தொடர்பான விவாதத்தின் 14 ஆவது நாளான இன்று (28) வரவு செலவுத் திட்ட குழுக்களின் விவாதத்தில் ஊடகத்துறை தொடர்பான விவாதத்தின்போதே ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தெரிவித்த அவர்,

எமது அரசாங்கம் பதவியேற்றபோது, இந்நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்பில் இந்நாட்டில் ஒரு கரும்புள்ளியே காணப்பட்டது. ஆயினும் ஒரு சிலர் இதனை மறந்து பேசுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் காண்கின்றோம்.

2006 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதியில் மாத்திரம், எமது நாட்டில் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்ததை நாம் மறக்கவில்லை; ஊடகவியலாளர்களை தாக்கியமை தொடர்பான 87 சந்தர்ப்பங்கள் பதிவாகியிருந்தன; 20 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்; 4 ஊடக நிறுவனங்கள் மீது 5 இற்கும் மேற்பட்ட தடவைகள் தாக்கி, தீக்கிரையாக்கினர்.

பிரதீப் எக்னெலிகொட போன்றோர் அக்காலப்பகுதியிலேயே காணாமல் போயிருந்தனர். 80 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக இந்நாட்டை விட்டு செல்லும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

ஆயினும் பிரதமர் கூறியது போன்று எமது நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான ஒரு விடயம்கூட இடம்பெறவில்லை. வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கலாம் அல்லது அதனை தெளிவுபடுத்தும் வகையிலான கடிதம் கோரப்பட்டிருக்கலாம் அன்றி யார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலோ வேறு எவை குறித்தேனுமோ எவ்வித கேள்விகளையும் இன்று கேட்கமுடியாதுள்ளமையிட்டு நான் சந்தோசமடைகின்றேன்.

ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு தரப்படுத்தல்களில் நாம் முன்னோக்கி வந்துள்ளோம். உலகின் 7 ஆவது மிகச் சிறந்த தகவல் அறியும் சட்டமூலத்தை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனைவரதும் ஒத்துழைப்புக்கு மத்தியில் அதனை நிறேவேற்றியுள்ளோம். அச்சட்டமூலம் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் அதனை யதார்த்தபூர்வமாக மாறும் என்பதை குறிப்பிடுகின்றேன்.

சமய தலைவர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை, இது குறித்தான கருத்துகளை பெறவுள்ளோம். அதன் பின்னரே அதனை அமுல்படுத்தவுள்ளோம்.

ஊடகவியலாளர் தொடர்பில், உத்தரவாதமான குறைந்த சம்பளம் தொடர்பில் முறையான சட்டமூலமொன்றை கொண்டு வரவுள்ளோம்.

அவர்களுக்கு சர்வதேச ரீதியிலான பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்களது பூரண கவனத்தை செலுத்தியுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பல்வேறு நிதிகளை ஒதுக்கியுள்ளோம். கலாநிதி பண்டித் WD அமரதேவ பேரிலான இசை மண்டபத்திற்காக ரூபா 50 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.

இதேவேளை, உள்நாட்டு கலைஞர்களின் நலன் கருதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்பில் விதிக்கப்படும் ரூபா 90 ஆயிரம் வரியை ரூபா 3 இலட்சமாக அதிகரித்துள்ளோம். 

ஜனவரி முதல் திரைப்பட அரங்குகள் அனைத்தையும் டிஜிற்றல் மயப்படுத்துவதற்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

8 வருடங்களின் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் சரசவி விருது வழங்கும் நிகழ்வை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டுள்ளோம். 

அது போன்று லேக் ஹவுஸ் நிறுவனத்தை நாம் கையேற்கும்போது ரூபா 800 மில்லியன் கடன் சுமையுடனே நாம் அதனை கையேற்றோம். தற்போதைய ஆட்சியின் கீழ், தலைவர் உள்ளிட்ட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் அதனை, ரூபா 300 மில்லியனாக குறைக்க முடிந்துள்ளது.

லேக் ஹவுஸின் கடன் சுமை குறைக்கப்பட்டது மாத்திரமல்லாது, அது  தற்போது ரூபா 150 மில்லியன் இலாபமீட்டும் நிறுவனமாகவும் மாறியுள்ளது. இவ்வருட இறுதியில் அதனை ரூபா 200 மில்லியனாக அதிகரிக்கவும் எதிர்பாரக்கின்றோம்.

லேக் ஹவுஸ் நிறுவனம், அரசியல் சேறுபூசும் இடமாகவே காணப்பட்டது. தற்போது அதன் பத்திரிகை விநியோகம் 10% இனால் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் இவ்வாட்சியில் அது சமனிலைத்தன்மையை பேணியதேயாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவனம், மான நஷ்ட வழக்குகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பிலேயே கவனம் செலுத்தி வந்தது. சட்டத்தரணிகளுக்கு பணம் செலவிட நேரிட்டது. நஷ்டஈடாக ரூபா 1.5 பில்லியன் கோரப்பட்டிருந்தது.

ஆனால் எமது அரசாங்கத்தின் கீழான நல்லாட்சியின் கீழ் அவ்வாறான நஷ்டஈடு கோரிய எந்தவொரு வழக்கும் இது வரை பதிவு செய்யப்படவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 3,500 இனால் அதிகரித்து அதனை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்துள்ளோம். எதிர்வரும் வருடம் ஜனவரி முதல் மேலு; ரூபா 300 இணைக்கப்படவுள்ளது.

அதே போன்று மற்றுமொரு சேறுபூசும் நிறுவனமாக காணப்பட்ட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நாம் ஆட்சிக்கு வந்தபோது ரூபா 374 மில்லியன் கடன்சுமையோடு அதனை பொறுப்பேற்றோம். மிக சிரமத்திற்கு மத்தியில் 2016 இல் அதனை ரூபா 102 மில்லியனாக குறைத்துள்ளோம்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ரூபா 10 ஆயிரம் சம்பளம், ரூபவாஹினி ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது என்பதோடு, அவ்வாறு அது வழங்கப்படாவிடின் அது மேலும் இலாபமீட்டும் நிறுவனமாக காணப்படும் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

ரூபவாஹினியின் மின்சாரக் கட்டணம் மாத்திரம் ரூபா 10 மில்லியனாகும். தற்போது மின்சார சபையுடன் இணைந்து, சூரியசக்தி மூலம் மின்சாரத்தை பெறவும், ஆசியாவின் முதலாவது பசுமையான ஊடக நிறுவனமாக மாற்றுவதற்குமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். Green Media Institute ஆக ரூபவாஹினி மாற்றமுறும்.

ரூபவாஹினியின் சமனிலைத்தன்மையை அடுத்து, அது பல்வேறு விருதுகளை வென்றுள்ளதோடு, அது இழந்த கிரிக்கெட் ஒளிபரப்பை மீண்டும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

எமது நாட்டின் 25% ஆனோர் தமிழ் மொழியை பேசுகின்றனர். அவர்களுக்கான தனி அலைவரிசையாக நல்லிணக்க அலைவரிசை எனும் பெயரில் நேத்ரா அலைவரிசையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கு அவசியமாக அலைவரிசை (Frequency) ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான உபகரணங்களை கொள்வனவு செய்ய ரூபா 180 மில்லியன் அவசியமாகின்றது. அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து இந்த நல்லிணக்க அலைவரிசைக்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் மூலம் நாள் முழுவதும், தமிழ் பேசும் மக்களுக்கான அலைவரிசையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியன நாம் ஆட்சிக்கு வரும் வரை, நாடகங்களை ஒளிபரப்ப இலஞ்சம் வழங்குதல் போன்ற ஒழுக்கமற்ற விடயங்களை மேற்கொண்டு வந்தன என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அதனை தற்போது முற்றுமுழுதாக தடை நிறுத்தியுள்ளோம். தற்போது இவ்வாறான விடயங்கள் எவரது தலையீடும் இன்றி இடம்பெற்று வருகின்றன. 

ITN குடும்ப தொலைக்காட்சி என அழைக்கப்படுகின்றது; ஆனால் கடந்த காலங்களில் அது ஒரு குடும்பத்தின் தொலைக்காட்சியாக செயற்பட்டு வந்தது. தற்போது கட்சி பேதமின்றி எல்லோருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு சிறந்த முறையில் செயற்படுவதற்கு வழி வகுத்துள்ளோம்.

அதேபோன்று ITN TV, ITN FM, ITN Web ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே பரிபாலனத்தின் கீழ் கொண்டு வந்து தேவையற்ற செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...