சீனி கொள்கலனினுள் 200 கிலோ கொக்கைன்; பிறேசிலிலிருந்து இறக்குமதி

சுமார் 200 கிலோ கிராம் கொக்கைன் போதைப் பொருளை மீட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒருகொடவத்தவிலுள்ள சுங்கத் திணைக்களத்துக்கு சொந்தமான கொள்கலன் களஞ்சியசாலையில், சுங்க சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கொள்கலன் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப் பொருளின் பெறுமதி சுமார் ரூபா 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து இன்று (24) மேற்கொண்ட திடீர் சோதனையின்   போதே குறித்த கொள்கலனிலிருந்து கொக்கைன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சீனி மூட்டைகளுடன் மூட்டையாக குறித்த போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததோடு, சுமார் 15 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இவ்வாறு சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதி எனும் பெயரில் பிறேசிலிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...