விபத்துகளை குறைப்பதே நோக்கம்; குறைந்த அபராதத்தில் மாற்றமில்லை | தினகரன்

விபத்துகளை குறைப்பதே நோக்கம்; குறைந்த அபராதத்தில் மாற்றமில்லை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

மக்களின் பாதுகாப்பே அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது என்பதால் போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் விதிக்கப்படும் மிகக் குறைந்த  அபராதத் தொகையான ரூபா 2,500 இல் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

பாதை ஒழுங்கு விதிகளைப் பேணுவதிலான ஒழுக்க நெறியை கடைப்பிடித்தல், பாதை விதிமுறைகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்துவதனால், குறித்த அதி குறைந்த அபராதத் தொகையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த அபராதத் தொகையை குறைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார் என்பதோடு, இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வாகனத்தில் செல்வோர் மாத்திரமன்றி பாதசாரிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளுக்கு அமைய, ஆகக் குறைந்த வீதி ஒழுங்கு மீறல் தொடர்பிலான அபராதம் ரூபா 500 இலிருந்து ரூபா 2,500 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறிப்பிட்ட அபராதத் தொகையை குறைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கு விதிகளை பேணாமையே, நாட்டில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கு முக்கியமான காரணமாகும்.  தனியார் பஸ்கள் வீதி விதிமுறைகளை ஒழுங்காக பேணுவதில்லை என்பதோடு, அடிக்கடி இவ்வாறான விபத்துகளை மேற்கொள்வோர்களாக காணப்படுவதே அவர்களின் கோரிக்கைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரின் அறிக்கைக்கு அமைய, இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 3,000 பேர் வீதி விபத்துகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகிலுள்ள ஆபத்தான பாதைகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள பாதைகளும் உள்ளடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  இதன் மூலம் பல வருட யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க வருடாந்தம் விபத்துகளின் மூலமான உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அபராத தொகையை குறைக்குமாறு கோருவோர், மறைமுகமாக மக்களை கொல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோருகின்றனர் என்பதோடு, நெடுஞ்சாலை விபத்துகளின் மூலம் நிகழும் கொலைகளிலிருந்தும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர் என்றே குறப்பிட வேண்டும்.

அது மாத்திரமன்றி, வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னர், பாதை ஒழுங்கு விதிகளை பேணாதோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததோடு, பொறுப்பற்ற சாரதிகளிடமிருந்து பாதசாரிகளை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பானது, வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை ஈட்டும் ஒரு நோக்கமாக அன்றி, மீண்டும் மீண்டும் நிகழும் போக்குவரத்து விதி மீறல்கள், குற்றங்கள் போன்றவற்றைத் தடுத்து பாதை தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

எனவே பாதை தொடர்பான விதிமுறைகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோரே, குறித்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்பதால் சட்ட திட்டங்களை பேணும் எந்தவொரு தனியார் பஸ் சாரதிகளோ, ஏனைய வாகன சாரதிகளோ புதிய அபராத தொகை குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பாதை விதிமுறைகளை பேணாத வகையில் வாகனங்களை செலுத்தும் ஒரு சிலர் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பொலிஸாரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...