முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல நீதிமன்று அனுமதி | தினகரன்


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல நீதிமன்று அனுமதி

 

முன்னாள் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்டிருந்த பிரயாணத் தடையை கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் கிஹான் பிலபிட்டிய தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனைவி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது கட்சிக்காரரை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்குமாறு அவருடைய சட்டத்தரணிகள் நிரோஷன் சிறிவர்தன, இந்திக திராமே ஆகியோர் மாஜிஸ்திரேட்டிடம் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த பின்னரே மாஜிஸ்திரேட் முன்னாள் அமைச்சரை நான்கு நாட்கள் பிரயாணமாக இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்கினார்.

இதன்படி, முன்னாள் அமைச்சரின் கடவுச்சீட்டும் அவரிடம் வழங்கப்பட வேண்டுமென பிரதம மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சொத்துக்களை வெளியிடத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கடவுச்சீட்டு முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

சொத்துக்கள், பொறுப்புக்கள் சட்டத்தின் பிரிவு 9 ன் கீழ் இலஞ்சம் மற்றும் மோசடி சம்பவங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்ைக தாக்கல் செய்திருக்கிறது. 


Add new comment

Or log in with...