பால்மா விலை அச்சுறுத்தல்! | தினகரன்


பால்மா விலை அச்சுறுத்தல்!

 

மதுபானம், சிகரட் பாவனையாளர்கள் அப்பழக்கங்களில் இருந்து முற்றாக விடுபடுவார்களேயானால் அந்நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும். இது மிகைப்படுத்தப்பட்டதொரு கருத்து அல்ல. இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளிலும் யதார்த்த நிலைமை இதுதான்.

ஏராளமான நாடுகளில் சிகரட், மதுபான விற்பனையிலிருந்து கிடைக்கின்ற வரிப்பணத்தில் இருந்து தான் அரசாங்கமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால், மக்களின் பலவீனத்தில்தான் நாட்டின் பொருளாதாரமே தங்கியிருக்கின்றது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

புகைத்தல் பழக்கத்திலிருந்து மீள்வதென்பது இலகுவான காரியமல்ல. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோரில் ஐந்து சதவீதத்தினர் கூட அப்பழக்கத்திலிருந்து மீண்டு கொண்டதில்லை. பெரும் கல்விமான்கள், புத்திஜீவிகள் உட்பட பல தரப்பிலும் உள்ள ஏராளமானோரை சிகரட்டும் மதுவும் அடிமையாக்கி வைத்திருக்கின்றன.

இவையிரண்டுக்கும் சமூக மட்டத்தில் பெரும் எதிர்ப்புகள் இருக்கின்றன. புகைத்தலையும் மதுப் பழக்கத்தையும் நிறுத்திக் கொள்ளுமாறு சமூகநல நிறுவனங்கள் குரலெழுப்பி வருகின்றன. இவ்விரண்டினதும் ஆபத்தான விளைவுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரசாங்கமும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் மதுவையும் சிகரட்டையும் அரசாங்கங்கள் ஒருபோதுமே தடை செய்ததில்லை.

இரண்டினதும் விலைகளை மாத்திரம் அடிக்கடி அதிகரித்து வருகின்றன. வரவுசெலவுத் திட்டத்தில் மாத்திரமன்றி இடைப்பட்ட காலத்திலும் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறுவதுண்டு. புகைத்தல், மதுபானப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக அனைத்து அரசாங்கங்களும் கூறி வருகின்றன.

மதுபான, புகைத்தல் பழக்கத்திலிருந்து மக்களை மீட்பதற்கான வழி விலை அதிகரிப்பு அல்ல. விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இப்பழக்கங்களிலிருந்து மக்கள் மீண்டு கொண்டதாக பதிவுகள் இல்லை. விலை அதிகரிக்கப்படுவதன் காரணமாக மது, சிகரட் பாவனையாளர்கள் அதற்காக கூடுதல் பணத்தை செலவிடுகிறார்களென்பதே உண்மை. அது மாத்திரமல்ல, இவ்வாறான போதைப் பழக்கத்திலிருந்து மீள முடியாததால் குடும்பச் செலவினத்துக்குரிய பணத்தின் ஒரு பகுதியும் போதைக்கென்று வீணாகச் செலவாகிறதென்பதுவும் உண்மை.

இவ்வாறிருக்கையில், விலையை அதிகரித்து புகைத்தல், மதுபானப் பழக்கத்தலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியுமென்று கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுவையும் புகைத்தலையும் தடை செய்வதன் மூலமே போதையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியுமென்பதே யதார்த்தம்.

ஆனால் மதுபானம், புகைத்தல் போன்றவற்றுக்கு இடமளித்துள்ள நாடுகளில் எதுவுமே இப்பழக்கங்களைத் தடை செய்வதற்கு முன்வந்தது கிடையாது. அரசாங்க வருமானத்தின் ஒரு பகுதி புகையிலை, மதுபானம் மூலம் கிடைத்து வருகின்றது என்பதைத் தவிர வேறு காரணமெதுவும் இதற்குக் கிடையாது. வெளிநாட்டுக் கம்பனிகளைத் திருப்திப்படுத்தியபடி வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கங்கள் உள்ளன.

இது ஒருபுறமிருக்க, இலங்கையில் சிகரெட், மதுபானம் விலைகள் சமீபத்தில் பெருமளவு அதிகரிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம். சிகரட் ஒன்றின் விலை ஒரே தடவையில் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட வரலாறு இலங்கையில் இதற்கு முன்னர் இல்லை. அதே சமயம் ஒரு போத்தல் மதுபானத்தின் விலை இருநூறு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதும் இதுவே முதன்முறையாகும்.

புகைத்தலுக்கும் மதுவுக்கும் அடிமையானோருக்கு இதுவொரு பேரதிர்ச்சியாகும். ஆனாலும் இவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பாக எவருமே வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாது. அவ்வாறு எதிர்ப்பதானது போதைப் பழக்கத்தை அங்கீகரிப்பதாக அமைந்து விடும். எனவேதான் சிகரட்டிலும் மதுபானம் மீதும் இலகுவாகக் கைவக்க அரசாங்கங்களால் முடிகிறது.

புகையிலையும் மதுவும் உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் கொடிய பழக்கங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்விரண்டையும் எவருமே வாங்கிக் கொள்ள முடியாதபடி ஆயிரம் ரூபாவினால் விலையை அதிகரித்தால் கூடப் பரவாயில்லை. உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்புவோரை எவரால்தான் தடுத்து நிறுத்த முடியுமென ஆறுதலடைந்து கொள்ள முடியும்.

ஆனால் பிரச்சினை அதுவல்ல.... சிகரட், மதுபான விலை அதிகரிப்புகளின் மூலம் ஈட்டப்படுகின்ற மேலதிக வருமானத்தைக் கொண்டு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஏன் முற்படக் கூடாதென்பதே பொதுமக்களின் கேள்வி.

மக்களின் பிரதான போஷாக்குணவு பால் ஆகும். அனைத்து ஊட்டச்சத்துகளும் கொண்ட நிறையுணவும் இதுவாகும். பால்மாவின் விலையை அரசு ஓரளவு குறைத்துள்ளதென்பது உண்மைதான். ஆனாலும் வறிய மக்கள் பால்மாவைப் பயன்படுத்தும்படியாக அவற்றின் விலை இன்னும் குறைக்கப்படவில்ல. மதுபானம், சிகரட் ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் பலனாக பால்மா விலைகள் குறைவடையுமென்ற சிறு நம்பிக்கையொன்று மக்கள் மத்தியில் நிலவிய போதிலும் அது ஈடேறவில்லை.

இவ்வாறான நிலையில் பால்மா விலையை அதிகரிக்க அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், இல்லையேல் தமக்கு வரிச்சலுகை வழங்க வேண்டுமெனவும் பால்மா இறக்குமதியாளர்கள் இப்போது குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

‘வற்’ வரி திருத்தம் காரணமாக பால்மா இறக்குமதிக்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளதென்பதே இறக்குமதியாளர்கள் முன்வைக்கின்ற காரணமாகும்.

பால்மா விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படக் கூடிய அறிகுறியையே இந்த அறிவிப்பு உணர்த்துகின்றது. மக்கள் மத்தியில் இதுபற்றிய கவலை இப்போது தோன்றியுள்ளது.

மதுபானத்துக்கும் சிகரட்டுக்கும் விலை அதிகரிக்கப்பட்டதைப் போன்று பால்மாவின் விலையும் அதிகரிக்குமானால் மக்கள் நலத் திட்டங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடலாம். அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை நோயாளர்கள் மனமாரப் பாராட்டுகின்றனர். போஷாக்குணவுகள் விலை விடயத்திலும் பொதுமக்களிடமிருந்து பாராட்டை அரசாங்கம் ஈட்டிக் கொள்வதே சிறந்தது. 


Add new comment

Or log in with...