கடன் சுமை; தாய் இரு வயது குழந்தையுடன் தற்கொலை | தினகரன்


கடன் சுமை; தாய் இரு வயது குழந்தையுடன் தற்கொலை

 

நுண்நிதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட சிறுதொகை கடனுக்குரிய தவணைக் கட்டுப் பணத்தை செலுத்த முடியாமையால் இளம் தாய் ஒருவர் தனது குழுந்தையுடன் தற்கொலை செய்த நிலையில் கிணற்றில் இருந்து இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீள்குடியேற்ற கிராமமான வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு குழு முறையில் நுண்நிதி நிறுவனங்களால் கடன் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கடனை உரிய தவணைக்கு உடனடியாக செலுத்த முடியாத நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறை அடுத்து வீட்டை விட்டு தனது குழந்தையுடன் நேற்றைய தினம் (02) சென்றிருந்த இளம் தாயும், குழந்தையும் காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாயையும், குழந்தையையும் தேடிய கணவர் மற்றும் உறவினர்கள் சடலம் கிணற்றில் இருந்ததைக் கண்டு ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து, குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலாமக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த நாகநாதன் சுகந்தினி (23), மற்றும் அவரது 02 வயதான குழந்தை நாகநாதன் ஜிந்துஜன் ஆகியோர் ஆவர். 

சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அப்பகுதி மக்களிடமும் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை, கணவன் கடந்த சில நாட்களாக நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)

 


Add new comment

Or log in with...