வற்வரி இன்று முதல் அமுல்; சிகரட் விலையும் அதிகரிப்பு

 

பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி (VAT) திருத்ப்பட்ட நிலையில் இன்று (01) முதல் அது 15% ஆக அமுல்படுத்தப்படவுள்ளது.

முன்பு 11% ஆக இருந்த வற் வரி, 15% சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டதோடு, கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைந்த எல்லை, காலாண்டுக்கு ரூபா 100 மில்லியனிலிருந்து ரூபா 12.5 மில்லியன் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வற் வரி பதிவின் குறைந்த எல்லை, காலாண்டுக்கு ரூபா 3.75 இலிருந்து ரூபா 3 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த, சிகரட், மதுபானம், தொலைபேசி சேவைகள், இலத்தரனியல் உபகரணங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் என்பன தற்போது திருத்தப்பட்ட வற் வரியில் உள்வாங்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் அதிகரிக்கும்.

எனினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலை, வற் வரி திருத்தத்தினால் அதிகரிக்கப்படமாட்டாது.

மேலும் சத்திரசிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகள், வெளிநோயாளர் சிகிச்சை சேவைகள் என்பவற்றுக்கு வற் வரி உள்ளடக்கப்படவில்லை என்பதோடு, வைத்திய ஆலோசனை, வைத்தியசாலை அறைக் கட்டணம் என்பவற்றிற்கு வற் வரி உள்ளடக்கப்பட்டுள்ளது. 

2% ஆக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி மாற்றம் செய்யப்படவில்லை என்பதோடு, காலாண்டுக்கு ரூபா 3.75 ஆக இருந்த அதன் எல்லை ரூபா 3 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனைங்கள், மின்சாரம் ஆகியன தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் 82 அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


சிகரட் விலையும் அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வற் வரி காரணமாக அனைத்து வகையான சிகரட் விலைகளும் அதிகரிப்படும் என இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் சிகரட் வகைகள், குறைந்தபட்சம் ரூபா 5 - 10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிகரட் உற்பத்தி வரி ரூபா 5 ஆல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...