யாழ் மாணவர் போராட்டம் நிறைவு; ஜனாதிபதியுடன் நாளை பேச்சு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வந்த கல்விச் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை முடக்கும் வகையிலான போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் ஹிந்து விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே குறித்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர மாணவர்கள் முடிவுசெய்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயில்களை மூடி, பல்கலைக்கழக மாணவர்களால் அதன் நிர்வாகத்தை முடக்கும் வகையிலான போராட்டமொன்று இன்று (31) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமைக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டு கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (31) முதல் நிர்வாக செயற்பாடுகளையும் முடக்கி போராட்டம் ஒன்றை யாழ் பல்கலை மாணவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள், போராசிரியர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருத்ததுடன், மாணவர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பில், நாளைய தினம் (01) பிற்பகல் 12.30 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அறிவித்திருப்பதாக அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...