உயிரிழந்த மாணவருக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும்

 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு அரசாங்கம் ஒருகோடி ரூபா நஷ்டஈட்டை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று (27) காலை 9.30 அளவில் யாழ் கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபை நடவடிக்கை ஆரம்பமாகிய வேளை திடீரென எழுந்த உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு மாணவர்களுக்கும் ஒரு கோடி ரூபா நஷ்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என கூறினார்.

இந்நிலையில்  சபையில் இருந்த  சகல  உறுப்பினர்களும் எழுந்து நின்று   அரசாங்கம் குறித்த மாணவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று ஏகோபித்த மனதுடன் சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை ஏற்று  வலியுறுத்தினர்.

இதன் போது குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் அரசாங்கத்திடம் இதனை முன்வைப்பதாக இன்று சபைக்கு தலைமை வகித்த அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு  இலக்காகி உயிரிழந்த   யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வட மாகாண சபையில் இன்று (27) மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளதோடு, அவருக்கு பதிலாக இன்றைய அமர்வில் அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...