வற் திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது | தினகரன்

வற் திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

வற் வரி மீதான திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே திருத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

11% ஆக இருந்த வற் (VAT) வரியை 15% ஆக மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டமூல திருத்தம் அரசியலமைப்புக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி ஆகியோரும் சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்திருந்த 04 வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் விசாரணை செய்ப்பட்டே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெறுமதிசேர் வரி (VAT) விதிப்பானது கடந்த மே மாதம் 02ஆம் திகதி முதல் 11% இலிருந்து 15% ஆக திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. ஆயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக உயர் நீதிமன்றம், குறித்த வரி திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் குறித்த சட்டமூல திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நாளைய தினம் (26) அது தெடர்பான விவாதம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, குறித்த சட்டமூலத்தை அச்சிடுவதற்காக, அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்புவதாக சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று (25) தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...