நீதி கோரி யாழில் பூரண ஹர்த்தால் | தினகரன்

நீதி கோரி யாழில் பூரண ஹர்த்தால்

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டிய யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் மற்றும் முழு கடை அடைப்பினால் யாழ். குடாநாடே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இன்று (25) அதிகாலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதோடு, யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டதுடன், பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் , தனியார் வங்கிகள் மற்றும் சில அரச வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் தமது பிரதேசங்களுக்குச் செல்வதற்கு பஸ் நிலையங்களில் காத்திருந்தார்கள்.

கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியே குடாநாடு முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி தமது ஆதரவினை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருந்தகங்கள் சில உட்பட ஏனைய அனைத்தும் முடக்கப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்

மக்களுக்கெதிரான ஆயுதப் படையினரின் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த வியாழக்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான சுகந்தராசா சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமையைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு சரியான நீதி விரைவாகக் கிடைப்பதை உறுதிப்படுத வேண்டும் எனவும், மாணவர்களின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றது.

அத்துடன், ஆயுதப் படையினர் சாதாரண மக்களுக்கெதிராக எவ்வித ஈவிரக்கமும் இன்றி மேற்கொள்கின்ற ஆயுதப் பிரயோகங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன், மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...