சகல பிரிவிலும் விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு (Update)

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அனைத்து பிரிவுகளிலும் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதுபதி உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றோர் மீது சூடு; இரு மாணவர்கள் பலி

 சுமித்தி தங்கராசா, பாரூக் ஷிஹான்

யாழ். கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். மற்றவர் யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து நேற்று யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இருவரினதும் பிரேத பரிசோதனை முடியும் வரை யாழ். பல்லைக்கழக மாணவர்கள் யாழ். ஆஸ்பத்திரி முன் திரண்டு நின்றதோடு காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடமையில் இருந்த 5 பொலிஸார் கைது செய்யப்பட்டதோடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று மாலை அறிவித்தது.

அத்துடன் இரகசிய பொலிஸ் குழுவொன்றும் யாழ். நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி சதீஷ்தரன் நேற்று சென்றிருந்தார். இந்நிலையில் போதனா வைத்தியசாலையைச் சுற்றி பல்கலைக்கழக மாணவர் சூழ்ந்திருந்ததால் பதற்றம் நிலவியது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்ததுடன் மரணமான இளைஞர்களின் பெற்றோரையும் அழைத்துச் சென்றார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் சுலக்ஷன் என்பவர் மீது துப்பாக்கி சூடு பட்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த கஜன் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றபோதும் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் நடத்தினார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது, யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மாணவர்களை பொலிஸார் இடைவழியில் திடீரென மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மூன்றுக்கும் மேற்பட்ட வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது, காயங்களுடன் காணப்பட்ட மாணவர்களை பொலிசார் உடனடியாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் பெரிய சேதங்கள் எதுவுமின்றி காணப்படுகிறது.

இப்பகுதியில் பொலிஸாரின் பல்வேறு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இருவரில் ஒருவர் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகவியல் துறையிலும், மற்றையவர் அரசறிவியல் துறையிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.

கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு அதிவேகமாக வந்துகொண்டிருந்த வேளையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையிலேயே நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோனை நடத்தப்பட்டு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினாலும் விபத்தின் காரணமாகவும் இளைஞர்கள் மரணமாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...