யாழ். மாணவர்கள் பலி; பொலிஸார் ஐவர் பணி நீக்கம்

றிஸ்வான் சேகு முகைதீன்

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக இன்று (21) பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 05 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (20) நள்ளிரவு அளவில் (11.55) இடம்பெற்ற குறித்த சம்பவம் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்‌ஷன் (24) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடத்தில் கல்வி கற்று வந்தவர்கள் என்பதோடு, கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு, அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை பொலிஸார் நிறுத்துமாறு பணித்தபோதிலும், அவர்கள் பொலிஸாரின் கட்டளையை மதிக்காது பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதை அடுத்து, குறித்த இருவரும் வீதியின் அருகிலிருந்த மதில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் ஐவரை கைது செய்துள்ளதோடு, அவர்களது பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...