ரஜினிமுருகன் ஜோடியின் ரொமான்டிக் ரெமோ

 

எஸ்கே (SK-Sivakarthikeyan) என்று கேரக்டருக்கு பெயர் வைத்த டைரக்டருக்கு தேங்க்ஸ். அத்தனை பெரிய பெயரை ஒவ்வொரு முறையும் அடிக்க முடியவில்லை. டைட்டிலிலும் எஸ்.கே. என்று போட்டுதான் எக்ஸ்பாண்ட் பண்ணிக்காட்டுகிறார்கள்.  

பெண்களென்றாலே பயப்பட்டு ஒதுங்கி ஓடும் சிவகார்த்திகேயன், படத்தில் எஸ்.கே, காதல் கடவுளிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கும் எஸ்கேவுக்கு நடிப்பின்மீது தான் ஆர்வம். ஆனாலும் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சந்திக்க, அவருக்கும் காதல் துளிர்விடுகிறது.

காதல் நிச்சயமாகுமா என்று கீர்த்தியை அவர் வீட்டில் சந்திக்கப்போகும் எஸ்கேவிற்கு, அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. கீர்த்திக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் கல்யாண நிச்சயம். இந்தக் காதலெல்லாம் ஒத்துவராது என்று ஒரே சீனில் உதறிவிடுகிறார் எஸ்கே. 

சினிமாவில் ஆர்வம் காட்டும் எஸ்.கே., கே.எஸ். ரவிகுமாரிடம் தாதி (நர்ஸ்) வேடமிட்டு வாய்ப்புக் கேட்டுச் செல்கிறார்.

வரும் வழியில் கீர்த்தியை சந்திக்க நேரிடுகிறது, நர்ஸாக வேடமிட்டிருந்த அவர், அவர் முன் நர்ஸாகவே தொடர்கிறார். அதன் பின் கீர்த்தி டாக்டராக இருக்கும் மருத்துவமனையில் வேலைக்கும் சேர்கிறார் என நகர்கிறது கதை.... 

முதலில் அந்தப் பெரும் கலைஞனைப் பாராட்டிவிடுவோம். பி.சி. ஶ்ரீராம். இவர்தான் படத்தின் கேமராமேன். டெப்லெட் பிசி காலத்திலும் மௌஸ் இருக்கிறதென்றால் அது இந்த பி.சி (PC)க்குதான்!

ஃப்ரேம் வைப்பது என்கிற விஷயத்தை இவரின் படங்கள் பார்த்தே கற்றுக்கொள்ளலாம். படத்திலுள்ள ஒரு பாட்டு சீனில், கீர்த்தி காபி குடிக்கின்ற க்ளோஸப் ஃப்ரேம், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் கீர்த்தி க்ளோஸப்பிலும், சிவகார்த்திகேயன் கொஞ்சம் லோங்கிலும் தெரிகிற ஒரு ஃப்ரேம், மொட்டை மாடியில் பறக்கிற பலூன்கள் கீர்த்தியின் கண்ணில் தெரியும் ஒரு ஷாட் என்று வித்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ரொம்ப ப்ரைட்டாகவும் இல்லாமல், இருட்டு அப்பியும் இல்லாமல்... பிரமாதமாக இருக்கிறது. எப்படி பி.சி இப்படி? என்று கேட்டகத் தோன்றுகிறது.

சிவகார்த்திகேயன் சதீஷ் ஜோடி படம் என்றால் கவுன்டரும், காமெடிக்கும் குறைவிருக்காது என்பது நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. சனிக்கிழமைக்கு அடுத்த நாள் சண்டே என்பது போல இது எல்லோருக்கும் தெரிஞ்ச செய்தி.

அவரின்  நடிப்பும் டான்ஸும் படத்துக்கு படம் மெருகேறிக்கொண்டே வருகிறது. கே.எஸ்.ரவிக்குமாரிடம், நடிக்கத்தெரியாமல் நடிக்கும்போது செஞ்சுரி என்றால், கீர்த்தியிடம் உண்மையாகவே தைரியம் வந்து சொல்லும்போது உடல்மொழியில் கான்ஃபிடென்ஸ் காட்டிய நடிப்பில் டபுள் செஞ்சுரி. 

நடிகைகள் ரெஜினா கஸாந்திரா மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகிய இருவரினதும் பெயரை சேர்த்து ரெஜினா மோத்வானி என தனது பெயரை சொல்கிறார் நர்ஸாக வரும் எஸ்கே.

படத்தின் ஹீரோயின் யார் என்பதில் 'ரெஜினா மோத்வானி'-க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கடும்போட்டி நிலவுகிறது. படத்தில் அவர் வரும் இடங்களும் அதிகம் என்றே கூறவேண்டும். நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள கதை என்பதால் கீர்த்தி சுரேஷும் கிடைத்த காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார். கீர்த்தி சுரேஷ் அவ்வளவு அழகு என்பது பிசிஶ்ரீராமின் கேமரா வழியாகப் பார்க்கும்போதுதான் தெரிகிறது.

பாக்யராஜ் கண்ணனுக்கு.. வார்ம் வெல்கம்! கதை சொல்லியே படத்தை ஆரம்பிக்கும் ட்ரெண்டை கொண்டு வந்த எஸ்.ஜே. சூர்யாவின் அதே பாணியில், அவர் குரலிலேயே படத்தை ஆரம்பித்து அதிலிருந்து கடைசி சீனில் பேனரில் கே.எஸ். ரவிகுமார் பெயர் 'பாக்யராஜ் கண்ண'னாக  மாறுவது வரை சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனமெடுத்து இழைத்திருக்கிறார். 'பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி' போன்ற புதிய வசனங்களுக்கும் குறைவில்லை. 

பாடல்களில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டு, BGM (பின்னணி இசையில்) அதிரடி காட்டியிருக்கிறார் அனிருத். அதுவும் வைத்திசாலையில் இடம்பெறும் சண்டைக் காட்சியின் பின்னணி இசை கெத்து!

சிங்கிள் வேண்டுமென்றாலே சிக்ஸடிக்கிற தோனியாய் சிவகார்த்திகேயன் இருக்கும்போது, ஸ்கோர் செய்வது கஷ்டம்தான்.. ஆனால் அடிக்கற குட்டிக்குட்டி கவுன்டர்களில் உரக்கச் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்யா என்று கதைக்கேற்ற பாத்திரங்கள். 

கார்பரேட்டர் அடைத்துக்கொண்ட பைக் போல, திரைக்கதை அங்கங்கே உட்கார்ந்து விடுகிறது. இன்னும் எத்தனை படங்கள்தான் இந்தப் 'பசங்க பாவம்யா' டோன்லயே எடுப்பீங்க பாஸ்? ஹீரோ நல்லவருதான்.. ஓகே.. அவரை ஹீரோயின் கைபிடிக்கணும் என்பதற்காகவே பாவம், அந்த மாப்பிள்ளையை அப்படிக் காட்டணுமா என்ன? 

லாஜிக் உதைக்காமல் இல்லை. ஒரு ரூபாய் டவுண் பேமெண்டில் வீடே கிடைக்கிற காலத்தில், ஒரு டூவீலர் கூட இல்லாமல் டாக்டர், பஸ்ஸிலேயே வருவாரா? ஒவ்வொரு முறையும் அந்த மேக்கப்பை ஜஸ்ட் லைக் தட் போட்டுக்கொள்ளப் பழகிவிட்டாரா? அத்தனை நாள் நர்ஸாக வேலையே செய்யாமல் நடிக்க முடியுமா? வெறும் 10 நாளில், வலிந்து ஒரு பெண்ணுக்கு லவ்வை வர வைப்பது ஹீரோ என்பதால் ஓகே ஆகிவிடுமா? 

எல்லா லாஜிக் மீறல்களையும்.. ஒரு மேஜிக் மறக்கடித்துவிடுகிறது. அது சிவகார்த்திகேயன் மேஜிக்! அதிரடியான கமெர்ஷியல் பட விரும்பிகளுக்கு ஐஸ்கிறீம் கொடுத்திருக்கிறது படக்குழு... சாப்பிட்டு பாருங்கள்...

 


Add new comment

Or log in with...