கோதாபய, சேனாதிபதி உள்ளிட்ட 7 பேருக்கு பிணை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாற் அவன் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவன் கார்ட் கடல்சார் சேவை நிறுவனத்திடம், ஆயுத கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு ரூபா 1.14 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, இவ்வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (30) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கின் சந்தேகநபர்கள் 7 பேரையும், தலா ரூபா 2 இலட்சம் ரொக்கம் மற்றும் தலா ரூபா 10 மில்லியன் கொண்ட சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் பிணையில் விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.

மேலும் அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் குறித்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என சந்தேகநபர்கள் பூர்வாங்க ஆட்சேபணையை முன்வைத்திருந்தனர். ஆயினும் இது போன்ற முக்கியமான வழக்குகளில் இவ்வாறு முன்னுரிமை வழங்கப்படலாம் என சட்ட மாஅதிபரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு இடம்பெறும் சந்தர்ப்பத்தில், கோதாபய ராஜபக்‌ஷவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...