அனந்தியை விசாரிக்க புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவு | தினகரன்


அனந்தியை விசாரிக்க புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவு

 

அனந்தி நீதிமன்றத்தை அவமதித்தாரா என விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு   அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினரும், புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சி. சசிதரனின் மனைவியுமான அனந்தி சசிதரன் தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என அரச சட்டத்தரணி நேற்று (29) மன்றில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சுட்டிக்காட்டிய விடயத்திற்கு ஆதாரமாக அனந்தியினால் ஊடகங்களிற்குத் தெரிவித்த கருத்தின் இறுவட்டு, மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

"இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என பொய்யான ஆவணம் ஒன்றை அரச சட்டத்தரணியும், இராணுவத்தினரும் அடுத்த தவணைக்குக் கொண்டு வருவார்கள்" என அனந்தி ஊடகங்களிற்கு கருத்துக் கூறியுள்ள சாட்சியம், குறித்த இறுவட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவர், நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கையில்லை என நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தமை தொடர்பில் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அனந்தி சசிதரன் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார் எனவும் அது தொடர்பான இறுவட்டு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அனந்தியின் கணவரான எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பில் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெறுவதாகவும், இவ்வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாக, உதவி அரச வழக்கறிஞர் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போதே, குறித்த விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் அனந்தியிடம் விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு   அறிக்கை சமர்ப்பிக்குமாறு  புலனாய்வு பொலிசாருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் 
உத்தரவிட்டார். 

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...