ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் | தினகரன்

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்

 

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என அவரது சகோதரர் சத்யநாராயணா உறுதிபட தெரிவித்தார்.

இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் ரஜினி குடும்பத்தினர் சார்பில் 1,008 கலச பூஜை திங்கட்கிழமை நடைபெற்றது. காசி விசுவநாதர் சன்னதி முன்பு 1,008 கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜையில் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா பங்கேற்றார். பின்னர், திருக்கோயில் குருக்கள் சிவமணி தலைமையில், பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் இராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் சத்யநாராயணா கூறியது: காவிரி பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்படவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும் இறைவனிடம் வேண்டியுள்ளேன்.

தமிழக, கர்நாடக மக்கள் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போதுமே வரமாட்டார். அதில் எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை. மக்கள் விரும்பும் கதைகளைத் தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார். தற்போது எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ரஜினி தயாராகி வருகிறார் என அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...