ரமித் ரம்புக்வெல்லவின் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணி வீரருமான ரமித் ரம்புக்வெல்லவின் வாகன அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி, மது போதையில் மரம் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ரமித் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து சுதந்திர சதுக்கத்தில் வைத்து இடம்பெற்றதோடு, அவதானமின்றி வாகனம் செலுத்தியமை, விபத்தை தவிர்க்காமை, போதையில் வாகனம் செலுத்தியமை, போலியான இலக்கத் தகட்டைக் கொண்ட வாகனத்தை ஓட்டிச் சென்றமை, மற்றுமொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுவாத்தோட்ட பொலிஸாரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (27) குறித்த வழக்கு, கொழும்பு போக்குவரத்து நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த குற்றச்சாட்டுகளின் முதல் இரண்டையும் தாம் ஒப்புக்கொள்வதாகவும், ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் நிரபராதி என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட பலூன் சோதனையில் அவர் போதையில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும், விபத்தின் பின் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், அவருக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யும் பொருட்டு நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிறுத்தியபோது, அற்ககோள் வாசனை அவரிடம் காணப்பட்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அவரது வாகன அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடைசெய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், இது குறித்தான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

 


Add new comment

Or log in with...