அதிவிரைவில் பூப்படையும் சிறுமிகள்! பெற்றோர் கவனத்துக்கு | தினகரன்

அதிவிரைவில் பூப்படையும் சிறுமிகள்! பெற்றோர் கவனத்துக்கு

 

பெண் குழந்தைகள் பூப்படையும் வயது 12 முதல் 16 ஆக இருந்த காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 10, 11 வயதிலேயே பூப்படைந்துவிடுகிறார்கள் சிறுமிகள். சிலர் 8, 9 வயதில் பூப்படைவதையும் பார்க்க நேரிடுகிறது.

 

இதற்கான காரணங்கள் என்ன, அப்படிப் பூப்பெய்த சிறுமிகளுக்குத் வழங்க வேண்டிய உடல்நல, மனநல அக்கறைகள் என்ன? 

சிறுமிகள் அதிவிரைவில் பூப்படையும் (Early Puberty) பிரச்னைக்கு, பல காரணங்கள் உள்ளன. மரபும் ஒரு காரணம். அந்தச் சிறுமியின் அம்மா, பாட்டி, அத்தை என்று அவள் குடும்பத்தில் யாரேனும் விரைவில் பூப்படைந்தவர்களாக இருந்தால், அந்த ஜீன்தான் சிறுமியும் 10 வயதிலேயே பூப்பெய்த காரணமாகியிருக்கும்.

அடுத்ததாக, மாறிவரும் உணவுப் பழக்கங்கள். கீரை, காய்கறிகள், பயறு வகைகள் என முன்போல சத்தான உணவுகள் இப்போது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. இன்னொரு பக்கம், அவர்களும் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத்தான் விரும்பி உண்கிறார்கள். இதனால் அதிகக் கொழுப்பு உடலில் சேர்வதால் ஓமோன்கள் சீராக இயங்காமல் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polysistic Ovary Syndrome) நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இது கருமுட்டை உருவாகும் சுழற்சியை மாற்றி அமைத்து, விரைவில் பூப்படைய செய்வதோடு ஒழுங்கற்ற மாதவிடாய்க்கும் வழிவகுக்கிறது.

சூழலில் காணப்படும் மாசும் இதற்குக் காரணமாக அமையலாம். பூச்சிகொல்லிகள், சாப்பிடும் தட்டு முதல் தண்ணீர் போத்தல்வரை ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு என உணவு மூலம் உடலுக்குள் செல்லும் இரசாயனங்கள் ஓமோன் மாற்றத்தை ஏற்படுத்தி பூப்படைதலை விரைவுபடுத்துகின்றன.

மேலும், திருமணம் முடிக்காத பெற்றோரின் குழந்தையாக வளர்வது, சிறு வயதில் பாலியல் தீண்டலுக்கு ஆளாவது என குடும்பச் சூழல் தரும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஓமோன் சமச்சீரின்மையும் அவர்களை விரைவில் பூப்படைய வைக்கிறது.

காரணம்,  அவர்கள் வயதுக்கு மீறிய இந்தப் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள அவர்களின் உடலைத் தயார்படுத்தும் விதமாக ஓமோன்கள் இயங்க பூப்படைதலும் விரைவில் நிகழ்கிறது.

 

பூப்படைதலை இயல்பான வயதுக்குத் தள்ளிப்போட...

 • வீட்டில் சமைத்த உணவுகள், தீனி வகைகளையே குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
 • இனிப்பு, கொழுப்பு உணவுகள் தவிர்த்து புரதச்சத்துகள் நிறைந்த காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களைத் தொடர்ந்து அவர்களைச் சாப்பிடச் செய்யுங்கள்.
 • தினமும் குழந்தைகளை ஓடியாடி விளையாடச் செய்யுங்கள். எளிமையான உடற்பயிற்சிகள், யோகா பழக்குவது இன்னும் சிறப்பு. இது கொழுப்பு உடலில் படிவதைத் தவிர்த்து ஒபிஸிட்டில் இருந்து அவர்களைக் காப்பாற்றும்.
 • பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட லன்ச் பொக்ஸ், தின்பண்ட பொட்டலம், கரண்டி, தட்டு போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
 • எந்த மனப்பதற்றமும், மனஅழுத்தமும் இல்லாத அமைதியான குடும்பச் சூழலை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

 

பூப்படைந்த சிறுமிகளுக்குப் பக்குவமாகச் சொல்லிக்கொடுக்க...

10, 11 வயதில் சிறுமிகள் பூப்படையும்போது, அவர்களுக்குத் தங்கள் உடலைப் பற்றிய புரிதலோ, விழிப்புஉணர்வோ இருக்காது. 
இந்நிலையில் தங்கள் உடலில் புதிதாக ஆரம்பிக்கும் மாதவிடாய் சுழற்சியை அவர்கள் எதிர்கொள்ளும்போது, அதில் ஏதாவது பிரச்னை என்றால் அதை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவரச்சொல்லி அவர்களை வலியுறுத்துவது முக்கியம். 

அதற்கு பின்வரும் மாதவிடாய் குறித்த மருத்துவத் தகவல்களை அவர்கள் அறியச் செய்யுங்கள்...

 • பொதுவாக 27 & 45 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நிகழலாம். பூப்படைந்த சிறுமிகளுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக ஒரு வருடம் கூட ஆகலாம். அதுவரை இரண்டு மாதங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம். அது குறித்து அச்சப்படத் தேவையில்லை.
 • 15 நாட்களுக்கு ஒருமுறை என, தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால், கருமுட்டை உருவாதலில் சிக்கல் இருக்கலாம். அது பின்னாளில் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவ சிகிச்சை அவசியம்.
 • பொதுவாக இரத்தச்சோகை (அனீமியா) என்றால் இரத்தப்போக்கு மிகக் குறைவாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இரத்தச்சோகை உள்ளவர்களுக்கு மிகுதியான இரத்தப்போக்கு ஏற்படலாம் என்பதுடன், அது வெளிர் சிவப்பு (பிரைட் ரெட்) நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • இரத்தப்போக்கு கறுப்பாக (அல்லது சாம்பல் நிறத்தில்) இருந்தால், கருமுட்டை உருவாதல் (ஓவ்யூலேஷன்) நடக்கவில்லை என்று அர்த்தம்.அது தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை முக்கியம்.
 • குறைந்த உதிரப்போக்குக்கு ஓமோன்கள் சமச்சீரின்மையும் காரணமாக இருக்கலாம்.
 • மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி, கால் வலி, இடுப்பு வலி, சோர்வுபோன்றவை ஏற்படுவது இயல்பே. மற்ற நாட்களில் நன்றாக ஓடி ஆடி விளையாடுவது மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
 • வயிற்றில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டால், கர்ப்பப்பை சார்ந்த இடங்களில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அலட்சியப்படுத்தாமல் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
 • எந்த வகை நாப்கின் பயன்படுத்தினாலும், எவ்வளவு குறைவாகவோ, அதிகமாகவோ உதிரப்போக்கு இருந்தாலும், 3 & 4 மனி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டியது அவசியம்.
 • இன்று சந்தையில் கிடைக்கும் சுகாதார துணிகள், அரிப்பு, அலர்ஜி, கட்டி போன்ற பிரச்சினைகள் வரக் காரணமாகின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. எனவே, அல்ட்ரா நாப்கின் பயன்பாட்டால் அலர்ஜி ஏற்படுபவர்கள் இயற்கையான கம்பளியினால் தயாரிக்கப்படும் ஆனயானிக் (Anionic) நேப்கின்கள் பயன்படுத்தலாம். பொதுவாக மாதவிடாய் நிர்ணயிக்கும் காரணங்களுடன் இதுவும் அடங்கும்.

மனதளவில் சிறுமியாக இருப்பவள் உடலளவில் குமரியாகும் இந்த நுட்பமான பயணத்தைக் கடக்க, பெற்றோரின் பொறுப்பும், அக்கறையும், அரவணைப்பும் அவளுக்குப் பலமாக இருக்கட்டும்!


Add new comment

Or log in with...