போதையில் விபத்து? ரம்புக்வெல்லவுக்கு பிணை (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கைது செய்யப்பட்ட ரமித் ரம்புக்வெல்ல, சற்று முன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள அவர், மது போதையில் இருந்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மூன்றாம் தரப்பைச் சேர்ந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தினகரன் ஒன்லைனுக்கு தெரிவித்தார்.

ஆயினும், எதிர்வரும் 27 ஆம் திகதி அலுத்கடை நீதிமன்றின் இலக்கம் 07 நீதிமன்ற பிரிவில் ஆஜராகுமாறு அவரை பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அவர் மது போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவ்வறிக்கை அவருக்கு சாதகமற்றதாக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

முன்னாள் அமைச்சரின் மகன் ரமித் ரம்புக்வல்ல கைது

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரரான ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருபத்தைந்து வயதான ரமித் ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை (19) கடவத்தை, ரன்முத்துகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், நுவன் குலசேகர கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...