மஹிந்தானந்த செப்டெம்பர் 22 வரை விளக்கமறியலில் (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கொழும்பு கறுவாத்தோட்டத்தில் (கொழும்பு 07) சுகபோக வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான மஹிந்தானந்த அலுத்கமவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூபா 2 கோடி 70 இலட்சம் பெறுமதியான குறித்த வீட்டை கொள்வனவு செய்தமை தொடர்பில், பண மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையிலேயே அவர் இன்று (15) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


மஹிந்தானந்த அலுத்கமகே CID இனால் கைது (Update)

 

இன்று (15) காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (CID) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைக்கபட்ட  அவரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, கின்ஸி வீதியிலுள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலமொன்றை பெறும் பொருட்டே அவர் இன்று (15) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் விளையாட்டு அமைச்சரும், ஐ.ம.சு.மு.வின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக கடந்த வாரம் (08) ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் ரூபா 5 கோடி 31 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, அவற்றை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டிற்கமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...