பெற்றோர் தண்டித்தனர்; காணாமல் சிறுவர்கள் தெரிவிப்பு

 

திருகோணமலையில் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வாழைச்சேனையில் வைத்து இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
திருகோணமலை - மஹிந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த அன்புவழிவபுரம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் நான்கு வகுப்பில் கல்வி கற்கும் 9 வயதுடைய யோகராஜா ரொசானா, மற்றும் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 6 வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுவன் லலித் பியந்த தணுஸ் ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (12) மாலை நேர வகுப்பிற்குச் சென்றிருந்த குறித்த இருவரும், காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தனர்.

வீட்டில் பெற்றோர் தண்டித்ததன் காரணமாக புகையிரத்தில் ஏறி வீட்டை விட்டுச் செல்ல தீர்மானித்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

வழைச்சேனை புகையிரத நிலையத்தில் இறங்கிய இவர்கள், அங்கிருந்து என்ன செய்வதென தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்றுள்ளனர்.

இதனை அடுத்து அங்கிருந்தோரால் மீட்கப்பட்ட குறித்த சிறுவர்கள், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்

இச்சிறுவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் நீதிமன்றம் ஊடாக பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வேலை செய்யாததனால் பெற்றார் தன்னை தண்டித்ததாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தந்தை மொனராகலையில் இராணுவத்தில் பணியாற்றுவதனால் சிறுபராயத்திலிருந்தே பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வருவதாகவும் வீட்டு வாசலிலுள்ள பூமரங்களை தண்ணீர் ஊற்றி பராமரிக்காததனால் மாமா தண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த இரு சிறுவர்களும் கொழும்பிற்குச் செல்லும் நோக்குடன் திருகோணமலை சீனன்குடா புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதம் ஒன்றில் ஏறியுள்ளனர். பின்னர் மாகோ சந்தியில் புகையிரதம் தரித்தவேளையில், மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மற்றுமொரு புகையிரத்தில் ஏறி வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்போதே குறித்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(ஏறாவூர் குறூப் நிருபர் - நாஸர்)

 


Add new comment

Or log in with...