சகீப் கொலை தொடர்பில் ஐவருக்கு வெளிநாடு செல்ல தடை (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கொலை செய்யப்பட்ட 29 வயதான சகீப்  கொலை தொடர்பில், முக்கிய சந்தேகநபர்களாக பொலிஸாரால் கருதப்படும் ஐந்து பேருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (25) குறித்த விடயம் தொடர்பில், கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குடிவரவு - குடியகல்வு திணைக்கத்திற்கு, குறித்த உத்தரவை வழங்கினார்.

குறித்த ஐவரும், சகீபின் கொலை தொடர்பில் முக்கியமான தகவல்களை அறிந்துள்ளார்கள் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த நபர்கள் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வதற்கும், பொலிசாருக்கு அனுமதி வழங்கினார்.


 

பம்பலபிட்டடி வர்த்தகர் மாவனல்லையில் சடலமாக மீட்பு

பம்பலபிட்டியில் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான், மாவனல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (24) இரவு மாவனல்லை, ஹெம்மாத்தகம வீதிக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கொழும்பிலிருந்து, வந்த விசேட பொலிஸ் குழுவினரால், மரணமடைந்தவரின் தந்தை உள்ளிட்ட அவர்களது உறவினர்களை அழைத்து, சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (22) இரவு சகீப், வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டிருந்த நிலையில், சடலம் மாவனல்லையிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சகீப், வேறொரு இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு, மாவனல்லையில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

கொலையாளிகளை கைது செய்வதற்கான சகல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...