இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு சர்வதேச விருதுக்கு தெரிவு | தினகரன்


இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு சர்வதேச விருதுக்கு தெரிவு

 

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7ஆவது கள பொறியியல் படையின் கண்ணிவெடிஅகற்றும் மோப்பநாயான“அல்வின்”மற்றும் அதனைகையாளும் லான்ஸ் கோப்ரல் ஜீ. என். டபிள்யூ எம். நவரத்ன ஆகியோரின் பெயர்களே இந்த சர்வதேச விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் “கிளியரிங் த பாத்”என்ற தலைப்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே 2016ஆம் ஆண்டிற்கான குழுவினர் (ட்ரீம் ஒப்த இயர் - 2016) என்ற சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.

விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் மோப்பநாயான“அல்வின்”மற்றும் அதனை கையாளும் லான்ஸ் கோப்ரல் ஜீ. என். டபிள்யூ எம். நவரத்னஆகிய இருவரைக் கொண்ட குழு வடக்கு மற்றும் கிழக்கில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் சுமார் ஐந்து வருடகாலப் பகுதிக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த சுமார் 73,340 சதுரமீற்றர் நிலப்பரப்பை சுத்திகரித்துள்ளன.

அத்துடன் 20 ஆர்பீஜி குண்டுகள், 48 கிரணைட்கள், 137 கண்ணிவெடிகள், 24 வெடிகுண்டுகள், 18 வெடிக்கவைக்கும் கருவிகள், 243 வெடிபொருட்கள் மற்றும் பெரும் தொகைவெடிபொருள் சாதனங்கள் என்பவற்றை இக்குழு மீட்டெடுத்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைகளின் பயனாக இடம்பெயரந்து வாழ்ந்த 415 குடும்பங்களைச் சேர்ந்த 1945 பேரை தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடிந்தது.

மேற்படி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள குழுவிற்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் மற்றுமொரு மோப்ப நாயான "சிரோ" மற்றும் அதனை கையாளும் செப்பர் டி. கே. என். ரோஹன ஆகியோரின் குழு இதே விருதுக்காக கடந்த 2012ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் 9570 சதுரமீட்டர் பரப்பை சுத்திகரித்ததுடன்,புலிகளால் தயாரிக்கப்பட்டிருந்த 101 கண்ணிவெடிகள், மோட்டார் குண்டுகள் போன்ற பல்வேறு வகையான வெடிபொருட்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...