பொலிஸ் பாதுகாப்புடன் யாழில் இந்து ஆலயம் இடித்தழிப்பு | தினகரன்

பொலிஸ் பாதுகாப்புடன் யாழில் இந்து ஆலயம் இடித்தழிப்பு

 

யாழில். இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. 

குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை பொலிசார் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். 

யாழ். காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பில் தெரிய வருவதாவது , 

குறித்த ஆலயமானது கடந்த 1918ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று தனி நபர் ஒருவரான சுப்ரமணியம் நாகராசா என்பவர், ஆலயம் அமைந்துள்ள காணி தனக்கு உரித்துடையது எனவும் அதனால் ஆலயம் தனக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளார். 

அதனால்  குறித்த நபருக்கும் , ஆலயத்தில் வழிப்பாட்டினை மேற்கொண்டு வருவோருக்குமிடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. 

அதனையடுத்து ஆலயத்தை உரிமை கோரிய நபர் ஊர்காவற்துறை பொலிசார் மூலம்  வழிப்பாட்டு மேற்கொள்வோரை மிரட்டி உள்ளார்.

அந்நிலையில் ஆலயத்தில் வழிப்பாடு மேற்கொண்டு வந்தோர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நம்பிக்கை சொத்து சட்டத்தின் கீழ் கடந்த ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி வழக்கு தொடுத்தனர். 

தற்போது வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்துக்களின் விரத தினமான ஆவணி ஞாயிறு தினமான நேற்று (22), ஆலயத்தில் பூஜை வழிபாட்டை மேற்கொண்டு வருவோர் , விஷேட பூஜை வழிப்பாட்டுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று (22), ஊர்காவற்துறை பொலிசார் சகிதம் ஆலயத்திற்கு வந்த ஆலயத்தை உரிமை கோரும் நபர், பொலிசாரின் உதவியுடன் பூஜை வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன், ஆலயத்தினுள் இருந்த பொருட்களை வெளியில் வீசியும் ஆலய மூல மூர்த்தியாக இருந்த முருகனின் வேலினையும் பிடுங்கி எடுத்துள்ளனர்.

பின்னர் ஆலயத்தினை முழுமையாக இடித்து அழித்துள்ளனர். அதனை அடுத்து பொலிசார் ஆலய மூல மூர்த்தியாக இருந்து பிடுங்கப்பட்ட முருகனின் வேலை, தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்தால் ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொண்டு வந்தோர், தாம் கடும் மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள போது சட்டவிரோதமான முறையில் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு பொலிசார் உடைந்தையாக இருந்துள்ளதுடன், ஆலயத்தை இடித்தழிக்க பாதுகாப்பும் வழங்கியுள்ளதாக குறித்த பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்த ஆலயமானது ஆகம முறைப்படி வேல் பிரதிஸ்டை பண்ணப்பட்டதோடு, அதில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றும் வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அடாவடித்தனமாக மூல மூர்த்தியாக இருந்த வேலினை பிடுங்கி எடுத்துள்ளதனால் தமது ஊருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ எனவும் அச்சமாக உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

(புங்குடுதீவு தினகரன் குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...