வாள்வெட்டு; இளம் குடும்பஸ்தர் மரணம் | தினகரன்


வாள்வெட்டு; இளம் குடும்பஸ்தர் மரணம்

 

யாழ்ப்பாணம் - சங்குவேலியில் குண்டர் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (17) புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (35) என்பவரே உயிரிழந்தவராவார். 

நேற்றிரவு குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இளைஞர் குழு இவரை சரமாரியாக வாளால் வெட்டியது.

தலை, கழுத்து, கை, கால் போன்ற பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவரை உறவினர்கள் உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்கை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, கொக்குவிலைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் நபரைத் தலைவராக கொண்ட குண்டர் கும்பல் ஒன்றே இந்தக் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. 

குறித்த வாள்வெட்டுக் குழு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள், வாள்வெட்டுக்களுடன் தொடர்புபட்ட போதிலும் பொலிஸார் இதுவரை இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...