கடந்த அரசாங்கத்தால் லாபமடையவில்லை - நவவி | தினகரன்


கடந்த அரசாங்கத்தால் லாபமடையவில்லை - நவவி

 

பாரிய அபிவிருத்திகள் எனும் பெயரில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட பிழையான அபிவிருத்தி திட்டங்களினால் நாடு கடனாளியாகியதை தவிர எவ்வித லாபமும் அடைந்து கொள்ளவில்லை என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.

கண்டக்குழி முஸ்லிம் மஹா வித்தியாலயம், தலவில சிங்கள மஹா வித்தியாலயம், விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுகள் நேற்று (15) காலை இடம்பெற்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் திட்டத்தின் பிரகாரம் புத்தளம் கல்வி வலயத்திலுள்ள 79 பாடசாலைகள் ஏ.பீ.சீ. எனும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 05 வருட காலத்துக்குள் இவைகள் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 

இந்த திட்டத்துக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமினால், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி ஆகியோர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வரிசையில் பீ. பிரிவு  பாடசாலைகளில் 10 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டங்களையே  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி  ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில்அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில், 

கடந்த காலங்களில் கல்வி அமைச்சுக்கு நூற்றுக்கு 02 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் கல்வி நடவடிக்கைளுக்கு 06  சதவீத நிதி உதவியை  ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருட காலமாக எவ்வித அபிவிருத்திகளையும்  மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டினார்கள். கடந்த அரசாங்கம் சீனாவை தவிர ஏனைய  நாடுகளுடன் கோபமுற்ற நிலையில்  இருந்ததாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் தற்போது உலக நாடுகள் நம்பிக்கை வைத்ததால் அபிவிருத்திகள் துரித கெதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை விளையாட்டு அரங்கு போன்றவற்றை கடந்த அரசாங்கம் நிறுவினாலும் கூட நாடு அதனால் எவ்வித லாபங்களையும் அடைந்து கொள்ளவில்லை.

வடமேல் மாகாணத்தில் நான் அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் புத்தளம் தொகுதிக்கு என்னாலான சகல அபிவிருத்திகளையும் செய்துள்ளேன். அத்தகைய சேவைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுத்தந்துள்ளார். அவருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் நாம் நன்றி  கூற கடமைப்பட்டுள்ளோம் எனக்கூறினார்.

(புத்தளம் தினகரன் நிருபர் - எம்.யூ.எம். சனூன்)

 


Add new comment

Or log in with...