மீண்டும் ஓய்வை அறிவித்தார் மைக்கல் பெல்ப்ஸ் | தினகரன்

மீண்டும் ஓய்வை அறிவித்தார் மைக்கல் பெல்ப்ஸ்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ், தற்போது பிரேசிலில் இடம்பெற்று வரும்,  றியோ 2016 ஒலிம்பிக் போட்டியின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியின் பின்னரும் 31 வயதான பெல்ப்ஸ், இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

ஆயினும் 2014 இல், தான் 2016 ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இறுதியாக நேற்று (12) பெல்ப்ஸ் பங்குபற்றிய, 100 மீற்றர் வண்ணாத்துபூச்சி வகை நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கிய பெல்ப்ஸ் வெள்ளிப் பதக்கத்தையே வெற்றி கொண்டார்.

இப்போட்டியில் சிங்கப்பூர் வீரரான, 21 வயது ஜோசப் ஸ்கூலிங் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டார் என்பதோடு, மற்றுமொரு அபூர்வமான விடயமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்ட ஜோசப் ஸ்கூலிங் 

 

தென்னாபிரிக்காவின் சட் லி க்லொஸ், ஹங்கேரியின் லாஸ்லோ சே மற்றும் மைக்கல் பெல்ப்ஸ் ஆகிய மூவரும் 51.14 செக்கன்களில் ஒரே நேரத்தில் நீந்தி முடித்திருந்ததே அச்சாதனையாகும்.

வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து கொண்ட மூவரும்

 

அந்த அடிப்படையில் குறித்த மூவரும் இரண்டாம் இடத்தை பெற்று, Three-way Tie எனும் நிலையை அடைந்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் மூவரும், தலா ஒவ்வொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருந்தனர்.

தங்கப் பதக்கத்தை பெற்ற ஜோசப் ஸ்கூலிங் 50.39 செக்கன்களில் நீந்தி தங்கப் பதக்கத்தை பெற்றார் என்பதோடு, இந்த ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் பெறும் முதலாவது தங்கப் பதக்கமாக அது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வழங்கும் நிகழ்வின்போது, குறித்த மூவரும் கைகளை பற்றியவாறு உயர்த்தி புன்னகை செய்தனர். 

குறித்த நிகழ்வின் பின்னரே பெல்ப்ஸ் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.  இதன்போது கருத்துத் தெரிவித்த பெல்ப்ஸ், "இன்னும் 4 வருடங்கள் வரை காத்திருப்பது என்பது சாத்தியமற்ற ஒரு விடயம். எனவே இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்" என்றார்.

ஆயினும் சக நாட்டு வீரரான ரையன் லொச் தெரிவிக்கையில், "பெல்ப்ஸ் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவார் என நான் உறுதியாக நம்புகிறேன். மைக்கல் நான் டோக்கியோவில் நிச்சயமாக சந்திப்பேன்" என்றார்.

மொத்தமாக 27 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற பெல்ப்ஸ், 2,000 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டவரான லியொனிடாஸின் சாதனையான, தனிப்பட்ட நபர் ஒருவர் பெற்ற 12 தங்கப் பதக்கம் எனும் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதுவரை 13 தனிப்பட்ட தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ஆம் ஆண்டு தனது 15 வயதில் கோடைக்கால ஒலிம்பிக்கில் அறிமுகமான பெல்ப்ஸ் 68 வருட அமெரிக்க வரலாற்றை மாற்றியமைத்து மிகக் குறைந்த வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீரர் எனும் சாதனையை படைத்தார். ஆயினும் அதில் எவ்வித பதக்கத்தையும் பெறவில்லை

மொத்தமாக 27 ஒலிம்பிக் பதக்கங்களை தன் வசம் கொண்டுள்ள பெல்ப்ஸ், 22 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளார்.

பெல்ப்ஸின் இறுதி ஒலிம்பிக் போட்டியாக இது பதிவு செய்யப்படுமிடத்து, இன்று (13) இடம்பெறவுள்ள 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் அவரது இறுதி ஒலிம்பிக் போட்டியாக அமையும்.

மனைவி குழந்தையுடன் பெல்ப்ஸ்

 


Add new comment

Or log in with...