13 கோடியை தாண்டிய மொகஞ்ச தாரோ; சர்ச்சையில் | தினகரன்


13 கோடியை தாண்டிய மொகஞ்ச தாரோ; சர்ச்சையில்

 

பிரபல இயக்குநர் அசுதோஷ் கௌரிகரின் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை பூஜா ஹெக்தே நடிப்பில் இன்று (12) வெளியாக இருக்கிறது மொகஞ்ச தாரோ (Mohenjo Daro). படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

சிந்து சமவெளி நாகரிகத்தையே உலகின் முதன்மையான நாகரிகம் என திரித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர், படத்தின் டிரைலர் காட்சிகளில் இருந்தே இதை உணர்ந்து கொள்ள முடிகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

பிரித்தானியரின் ஆட்சிக்கும் முன்னர், மொகலாயரின் ஆட்சிக்கும் முன்னர், கிறிஸ்து அவதரிப்பதற்கும் முன்னர், புத்தர் அவதரிப்பதற்கும் முன்னர், இந்தியா எனும் நாடு தோன்றுவதற்கும் முன்னர் மொகஞ்ச தாரோ தோன்றியதாக குறித்த காட்சியில் காட்டப்படுகின்றது.

 

பாஜிராவ் மஸ்தானியும் மொகஞ்சதாரோவும்...

ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் உருவாகி உள்ள மொகஞ்சதாரோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரை 13 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

 

[video:https://www.youtube.com/watch?v=UPZ5FKEB02I width:673 height:380]

 

லகான், ஜோதா அக்பர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகரின் அடுத்த படைப்பு என்பதால் பொலிவூட் ரசிகர்கள் மொகஞ்ச தாரோவுக்காகக் காத்திருக்கின்றனர். 

"சிறந்த சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என படத்தின் புரமோஷனுக்காகக் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால், எது உண்மையான வரலாறு என்பதை அறியாமல், இந்துத்துவ சிந்தனையாளர்களின் போக்கில் படம் எடுக்கப்பட்டதாகவே அறிகிறோம்" என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

"இந்தி பட இயக்குனர்களின் திடீர் வரலாற்றுப் பாசம் பற்றி நாம் கேள்வி எழுப்பவில்லை. வரலாற்றைப் பற்றிய இவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் 'பாஜிராவ் மஸ்தானி' என்ற படத்தில் சளைக்காத இந்து போர்வீரனாக கதாநாயகன் வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான முகலாயர்களை வீழ்த்துவதுதான் அவரின் ஒரே குறிக்கோள் என்பதாகப் படத்தில் காட்டப்பட்டது. 

நவீன இந்தியா உருவாகாத நிலையில், முகலாயப் பேரரசு பற்றி சஞ்சய் லீலா பன்சாலியால் திரிக்கப்பட்டது. இப்போதும் மொகஞ்சதாரோ படம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரைலரில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்து உண்மைக்கு மாறாக திரிக்கப்பட்டிருக்கிறது.

ஹரப்பா காலத்தில் சமஸ்கிருதமா?

சிந்து வெளி அல்லது ஹரப்பா நாகரிகத்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாக மொகஞ்சதாரோ இருந்துள்ளது. உலகின் தொன்மையான நகரம் ஒன்றின் கதை எனச் சொல்லிவிட்டு, இதன் காலத்தை கி.மு 2016 எனத் தெரிவிக்கிறார் அசுதோஷ். இதில் காட்டப்படும் அனைத்து அம்சங்களுமே தவறானவை. 

படத்தில் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியை பயன்படுத்தியுள்ளனர். 'இதே போன்ற ஒரு மொழிதான் சிந்துவெளியில் பேசப்பட்டிருக்கும்' என இப்படம் ஒருவரை எளிதில் நம்ப வைத்துவிடும். இதுபற்றிய அறிவிப்பும் டிரைலரில் காண்பிக்கப்படவில்லை. 

ஆனால், தொல்லியல் ஆய்வாளர்களோ, 'வெண்கல யுகத்தில் பல மொழி பயன்பாடு இருந்திருக்கலாம் அல்லது மொழியே இல்லாமல் இருந்திருக்கலாம்' என்கிறார்கள். அங்கே சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவோ எழுதப்பட்டதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை.

நாயகன் பேசும் இந்தி வசனங்கள் சினிமாவுக்கான சுதந்திரம் என்பதாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கல்வெட்டுகளில் எழுதப்பட்டதாகக் காட்டப்படும் சமஸ்கிருதம் தோய்ந்த ஹிந்தி எழுத்துகள், ரிக் வேத காலத்துக்கும் ஹரப்பா நாகரிக காலத்துக்கும் முடிச்சுப் போடும் இந்துத்துவ பிரசாரகர்களின் கருத்துக்கு வலு சேர்க்கவே பயன்படும்.

நாயகன் ஹிருத்திக் ரோஷன், நாயகி பூஜா ஹெக்டேவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வசனங்களைப் பாருங்கள். 'து மெரி சங்ஹானி ஹை' (நீ என்னுடைய இணை) என்கிறார்.  இந்த வசனம், நடைமுறையில் உள்ள மொழிக்கும் எழுத்து மொழிக்கும் மாறி மாறி பயணிக்கிறது. மொழி அரசியல் இந்த விவகாரத்தில் முக்கியமானது. இது திட்டமிடப்பட்ட வேலையாகவே பார்க்க வேண்டியுள்ளது" எனக் கொந்தளித்தவர்கள் , தொடர்ந்து,

இந்திக்கும் குதிரைக்கும் என்ன சம்பந்தம்? 

மேலும், " மொகஞ்சதாரோ படத்தின் டீசரில், ராஜாராமின் குதிரை முத்திரையையே பார்வைக்கு வைப்பதன் மூலம், அது மொகஞ்சதாரோவில் அரேபியக் குதிரைகள் இருந்ததாக நிறுவ முயல்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில், சமஸ்கிருதத்தின் ஒரு வடிவமான மொழி பேசப்பட்டது என்று நிரூபிப்பது, ஆரிய நாகரிகத்தின் தேவையாக இருக்கிறது. இதன் மூலம் ஆரிய இருப்பைக் கண்டறிய முயல்கிறார்கள். சிந்துவெளி காலத்தில் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாக இருக்கலாம் என நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து போய்விட்டன எனவும் சுட்டிக் காட்டுகிறார் ரொமீலா தாப்பர். 

இந்துத்துவ பிரசாரத்திற்கு மொகஞ்சதாரோவின் டீஸர் பொருத்தாக உள்ளது. கெளரிகர் சொல்லும் வரலாற்று விவரங்கள், உண்மையிலிருந்து கணிசமான அளவு விலகியிருக்கின்றன.

 


Add new comment

Or log in with...