காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் சபையில் நிறைவேற்றம் | தினகரன்

காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்

 

மஹிந்த அணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கும் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நேற்று பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க் கட்சி (மஹிந்த அணி) இந்த விவாதத்தைத் தடுப்பதற்கு தொடர்ந்து பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே. வி.பி யின் ஆதரவுடன் சட்டமூலம் சபையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சபையில் ஆளும் கட்சியின் சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்தபோதும் சபை நடுவில் கூடிய மஹிந்த அணியினர் பெரும் கூச்சலிட்டு கோஷங்களை எழுப்பி அதற்குத் தடை ஏற்படுத்தினர். எனினும் சபாநாயகரின் அனுமதியுடன் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றினார்.

அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம். ஏ. சுமந்திரனும், ஜே. வி. பி யின் சார்பில் பிமல் ரத்நாயக்கவும் விவாதத்தில் உரையாற்றினர். விவாதத்திற்குத் தடை ஏற்படுத்துவதிலும் செங்கோலைத் தூக்குவதிலும் பகீரத முயற்சி செய்த மஹிந்த அணியினரின் முயற்சிகள் படுதோல்வியடைந்ததுடன் அரசாங்கம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றியே ஒரு மணித்தியாலத்திற்குள் சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றியது.

அரசாங்கம் இந்த விவாதத்திற்காக 12 மணி நேரத்தை வழங்கியிருந்தபோதும் மஹிந்த அணியின் செயற்பாட்டினால் ஒரு மணித்தியாலத்தில் மேற்படி சட்டமூலத்தை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இது மஹிந்த அணிக்கு படுதோல்வியாகவும் அரசாங்கத்திற்குப் பெரும் வெற்றியாகவும் அமைந்துவிட்டது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் காலை 10.30 மணிக்குக் கூடியது. வழமையான நடவடிக்கைகளை யடுத்து மேற்படி விவாதம் தொடர்பில் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கிணங்க காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடத்தி இன்று 12ம் திகதி 2 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அறிவித்தார். அச்சமயம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சி எம்.பி. தினேஷ் குணவர்தன இன்று (12ம் திகதி) முழுநாள் விவாதத்தை முன்னெடுத்து இன்று மாலை அல்லது பிறிதொரு தினத்தில் வாக்கெடுப்பை நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று முன்தினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கிணங்க விவாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 12ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். பாரளுமன்றத்தில் கூட்டு எதிர்க் கட்சியை தவிர்ந்த ஏனைய 175 உறுப்பினர்களினதும் ஆதரவு உள்ளதால் இதனை மேலும் காலந்தாழ்த்த முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க் கட்சி எம். பிக்கள் அனைவரும் தமது ஆசனங்களை விட்டு எழுந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். கறுப்புப் பட்டியை அணிந்து சபையில் பிரசன்னமாகியிருந்த அவர்கள் அனைவரும் பெரும் கூச்சலுடன் சபை நடுவில் கூடினர். வர்களது கூச்சலும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கட்டுக்கடங்காமல் போகவே சபாநாயகர் கரு ஜயசூரிய 2.20 மணியளவில் சபையை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து சபை மீண்டும் 1.25 ற்கு கூடியது. கூட்டு எதிர்க் கட்சியின் பெரும் கூச்சலுக்கு மத்தியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபித்தல் சட்ட மூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவருக்கு எதிரே சபை நடுவில் கூடிய கூட்டு எதிரக் கட்சியினர் பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் பெரும் கூச்சலிட்டு அதற்குத் தடை ஏற்படுத்தினர். அதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட ஆளுங் கட்சியினர் சிலர் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு முன்பாக வந்து அவருக்குப் பாதுகாப்பாக நின்றனர்.

அரசாங்கம் இன்று மாலை வரை நேரத்தை வழங்கியிருந்தபோதும் கூட்டு எதிர்க் கட்சியின் மோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திலேயே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...