தவறாக வந்த அழைப்பால் தவறிப்போன யுவதியின் வாழ்க்கை | தினகரன்


தவறாக வந்த அழைப்பால் தவறிப்போன யுவதியின் வாழ்க்கை

 

இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருத்தியே இவ்வாறு சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த குறித்த இளம்பெண், தனது பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

ஒருநாள் இவ்யுவதியின் கைப்பேசிக்கு மிஸ்ட் கோல் ஒன்று வந்துள்ளதுடன், அது யார் என தெரிந்து கொள்வதற்காக அவ்யுவதி அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதன் போது மறுமுனையில் பேசியவர் தான் தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகக் கூறி அந்த அழைப்புத் துண்டித்துள்ளார்.

ஆயினும், மீண்டும் அதே இலக்கத்திலிருந்து குறித்த யுவதிக்கு அழைப்பை மேற்கொண்ட குறித்த நபர், தான் ஏற்கனவே தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்து, அவ்யுவதி பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் அந்நபர் அடிக்கடி இவ்யுவதிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரோடு உரையாடி வந்துள்ளார். இதனால் அந்நபர் மீது இவ்யுவதிக்கு காதல் ஏற்பட்டு குறுகிய காலத்தினுள் அவர்கள் காதலர்களாக மாறியுள்ளனர். 

குறித்த யுவதி தனது விபரங்களை அந்நபருக்குத் தெரிவித்த போதிலும் அந்நபரது விபரங்களைக் கேட்டறிய தவறியுள்ளார். 

இந்நிலையில் இந்த தொலைபேசி காதலன் தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என அவளிடம் தெரிவித்த போது அவளும் அதற்கு சம்மதித்து ஒரு நாள் தனது காதலனைச் சந்திப்பதற்காக இவ்யுவதி அவளது வீட்டுக்கும் தெரியாமல் ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவித்துவிட்டு கொழும்புக்குச் சென்றுள்ளார். 

அங்கு அவர்கள் சந்தித்துள்ளதோடு அன்றிரவு அவர்கள் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது தேவையினை நிறைவேற்றிக் கொண்ட அவ்விளைஞன் மறுநாள் காலையில் மிகத் தந்திரமான முறையில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளான யுவதி அங்கிருந்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தொலைபேசி காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

(புத்தளம் விஷேட  நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)

 


Add new comment

Or log in with...