A/L: கணித வினாத்தாள் தாமதம்; மேற்பார்வையாளர் நீக்கம்

இணைந்த கணித பாடத்திற்கான வினாத்தாளை ஒரு மணிநேரம் தாமதமாக வழங்கியதாக தெரிவிக்கப்படும் பரீட்சை மண்டபத்திற்கான பிரதான மேற்பார்வையாளரை உடனடியாக நீக்குவதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் ஆரம்ப தினமான இன்று (02) ஹேனகம மத்திய மகாவித்தியாலயத்தில், மு.ப. 8.30 மணிக்கு வழங்கப்பட வேண்டிய குறித்த வினாத்தாள் சுமார் ஒரு மணிநேர தாமதத்தின் பின்னர் மு.ப. 9.30 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாமதத்திற்கான காரணம், குறித்த பரீட்சை மண்டபத்திற்கான பிரதான மேற்பார்வையாளர் தாமதமாக சமூகமளித்திருந்தமை ஆகும் என தெரிவிக்கப்படுவதாலும், குறித்த மேற்பார்வையாளர் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளதாகவும் எனத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார, குறித்த அதிகாரியை இன்றைய பரீட்சைகள் நிறைவடைந்ததும் உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்ணப்பதாரிகளுக்கு எவ்வித அநியாயமும் இழைக்கப்படுவதற்கு இடமளிக்காத வகையில் செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...