LTTE துப்பாக்கி; பயன்படுத்தி கடற்படை வீரர் கொள்ளை

 

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் ரி56 ரக துப்பாக்கி ஒன்றைப பயன்படுத்தி, கொள்ளையில் ஈடுபட்ட வந்த கடற்படை வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள குறித்த மூவரையும், குறித்த ஆயுதம் மற்றும் மெகசின்கள், துப்பாக்கி ரவைகளுடன், பொலியத்தையில் வைத்து கைது செய்துள்ளதாக தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தனபால அபேவிக்ரம தெரிவித்தார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரணைகளில் ஈடுபட்டு வந்த, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இரு பிரிவுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெலியத்த, நாகுலகமுவ, குடாஹீல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள், 29 மற்றும் 30 வயது பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

பெலியத்த, நாகுலகமுவ ஆகிய பிரதேசங்களில் கைதான இருவரும், மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தின் கரையோர கடற்படை பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் எனவும் குடாஹீல்ல  பிரதேசத்தில் கைதானவர், சட்ட ரீதியாக கடற்படையிலிருந்து பிரிந்து சென்றவர் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் கூரை மேற்பாவுகையிலிருந்து ர56 ரக தன்னியக்க துப்பாக்கி மற்றும் இரு மெகசின்கள், துப்பாக்கி ரவைகள் 53 ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில், பெலியத்த பிரதேசத்திலுள்ள மூன்று வீடுகளில் இவர்கள் கொள்ளையிட்டுள்ளதோடு, கடந்த வருடத்திலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளமை தொடர்பில், குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து, மோட்டார்சைக்கிள் ஒன்று, ஒரு சோடி தங்க காதாணி, உருக்கப்பட்ட நிலையிலிருந்து தங்க உருண்டை, பெண்களின் கைப்பைகள் இரண்டு ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ரி56 ரக ஆயுதம், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட ஒன்று என, ஆரம்ப விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆயுதத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் குறித்தான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...