கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் இருதய நோயாளர் பெரும் அவலம் | தினகரன்

கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் இருதய நோயாளர் பெரும் அவலம்

 

* சத்திர சிகிச்சைக் கூடங்கள் மூடப்பட்டதால் உயிருக்கு போராட்டம்

* 25,26 ஆம் வார்ட் நோயாளர் ஜனாதிபதிக்கு மகஜர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள இரண்டு இருதய சத்திர சிகிச்சை கூடங்கள் மூடப்பட்டிருப்பதனால் சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்வதுடன் தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதாக இருதய நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 35 நோயாளர்கள் தமது சிகிச்சைகள் முடிவடைந்த நிலையிலும் சத்திர சிகிச்சைக்கு தயாராக நீண்டகாலமாக ஆஸ்பத்திரி வார்ட்டுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கும் மேலதிகமாக நாடு முழுவதுமுள்ள பல இருதய நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்பு வரிசையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அதேநேரம் சத்திர சிகிச்சைக்கான திகதியும் பிற்போடப்பட்டு வருவதனால் தாங்கள் உயிர் பிழைப்பது நிச்சயமில்லாமல் இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைக்காக வார்டுகளில் தங்கியிருக்கும் நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமது பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வுகாண வேண்டுமென்ற நோக்கில் வார்ட்டு 25 மற்றும் வார்ட்டு 26 ஐச் சேர்ந்த நோயாளர்களால் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஆகியோரிடம் நோயாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நோயாளர்களை சத்திர சிகிச்சை செய்வதற்கு வைத்தியர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையிலும் சத்திர சிகிச்சை கூடம் இல்லாமையினால் அங்கே செய்வதறியாத நிலை உருவாகியிருப்பதாகவும் இருதய நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு சத்திர சிகிச்சை கூடத்திலேயே மிகவும் மந்த கதியில் சத்திர சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றன. சத்திர சிகிச்சைக்குள்ளாகும் நோயாளிகளை தங்க வைப்பதற்கென 05 கட்டில்களைக் கொண்ட ஒரேயொரு அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரமே அங்கு இருப்பதாகவும் நோயாளர்களால் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள ஏனைய இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும் புனரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருப்பதாகவும் அவை இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குப் பின்னரே மீள திறக்கப்படுமென்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பதனால் இருதய கோளாறினால் அவதியுறும் நோயாளர்கள் தமது உயிருக்கு உத்தரவாதமின்றயை நி​லையில் உள்ளனர்.

லகஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...