இந்த அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது - ஜனாதிபதி | தினகரன்

இந்த அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது - ஜனாதிபதி

 

ஐ.தே.க. வும் சு.க.வும் ஐந்து வருடங்களுக்கு இணைந்திருக்கும்

ஐக்கிய அரசாங்கத்தை முன்கொண்டு சென்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமாகும் போது அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றக் குழு எடுத்திருந்த தீர்மானத்தை இரத்துச் செய்துள்ளது.

அடுத்த 5 வருடங்களுக்கும் ஐக்கிய அரசாங்கத்தை ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (30) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தை அசைப்பதற்கு எவராலும் முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஒன்பது இலட்சம் கோடி கடன் சுமை உள்ளிட்ட பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் முன்னால் ஜனாதிபதி தமது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு சென்றது.

அந்த அரசாங்கம் முகம்கொடுக்க வேண்டியிருந்த சவால்களுக்கு தற்போதைய அரசாங்கம் முகம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, உரிய அரச கொள்கை மற்றும் முகாமைத்துவத்தின் அடிப்படையில் அந்த எல்லா சவால்களுக்கும் வெற்றிகரமாக முகம்கொடுத்து நாட்டு மக்களுக்கு சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்றுவந்த குறித்த நடமாடும் சேவை, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

குறித்த நடமாடும் சேவையின் நிறைவு விழா இன்று (30) ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது.

மூன்று தேர்தல் தொகுதிகள் மற்றும் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் கடந்த 01ஆம் திகதி ஆரம்பமான இந்த நடமாடும் சேவையின் போது, மக்களிடமிருந்து சுமார் 44 ஆயிரம் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் சுமார் 40 ஆயிரம் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

பிரதமர் ரனில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


Add new comment

Or log in with...