ரதுபஸ்வல சம்பவத்திற்கு மூன்று வருடம்

 

ரதுபஸ்வலவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நாளைய தினம் (30) அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய நீரை வழங்குமாறு கோரி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, இராணுவத்தினரைக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி, அச்சம்பவம் இடம்பெற்று மூன்று வருடம் பூர்த்தியடைகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, இலங்கை இளைஞர் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிவேரிய, ரதுபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கினார் எனக் கூறப்படும் இராணுவத் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன இலங்கைக்கான துருக்கி தூதுவராலயத்தில் கடமையாற்றி வந்திருந்ததோடு, கடந்த வருடம் செப்டெம்பரில் அவர் இலங்கை வந்திருந்தார்.

இதன்போது, தெரிபெஹெ ஶ்ரீதம்ம தேரர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வந்திருந்ததோடு, பின்னர் அவர் பாதுகாப்பாக விமானநிலையத்திலிருந்து வெளியேறினார்.

 


Add new comment

Or log in with...