கண்டி, மாவனல்லையில் பாதயாத்திரைக்குத் தடை | தினகரன்


கண்டி, மாவனல்லையில் பாதயாத்திரைக்குத் தடை

 

மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மஹிந்த ஆதரவு அணி இன்று (28) நடத்தும் பாதயாத்திரையை கண்டி நகரில் இருந்து ஆரம்பிப்பதற்கு கண்டி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது. இது தவிர மேற்படி பாதயாத்திரை மாவனல்லை நகருக்கு நுழைவதற்கும் மாவனல்லை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டி மற்றும் மாவனல்லை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகளின் பிரகாரமே இந்த தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டதோடு சட்டத்தினூடாக மக்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவது அநீதி எனவும் மக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை தடுக்கவே இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் நீதவான் தமது தீர்ப்பின்போது அறிவித்துள்ளார்.

பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை, உள்ளூராட்சி சபை தேர்தல் ஒத்திவைப்பு, வரிச்சுமை அதிகரிப்பு, யுத்த நீதிமன்றம் ஏற்படுத்தல், இந்தியாவுடனான ஒப்பந்தம் மற்றும் அரசியல் அடக்குமுறைகள் என்பவற்றை கண்டித்து மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரை இன்று காலை 9.00 மணிக்கு கண்டி தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமாக ஏற்பாடாகியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரையில் மஹிந்த ஆதரவு அணியிலுள்ள சுதந்திரக் கட்சி எம்.பிக்கள், தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிதுரு ஹெல உருமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி, சமசமாஜக் கட்சி, ஜனதா சேவக்க கட்சி, மக்கள் கட்சி, அடங்கலான பல கட்சிகள் பங்கேற்கின்றன. கண்டி நகரில் ஆரம்பித்து இன்று மாலை மாவனல்லை நகரை பாதயாத்திரை அடைய ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையிலே கண்டி மற்றும் மாவனல்லை நீதிமன்றங்கள் பாதயாத்திரைக்கு சில தடை உத்தரவுகளை விதித்திருக்கின்றன.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஆலோசனைப் படியே இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மஹிந்த ஆதரவு அணி முக்கியஸ்தரான மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி என்னும் திட்டமிட்டபடி பாதயாத்திரை கண்டியில் இருந்து கொழும்பு வரை இடம்பெறும் என்றார். நீதிமன்ற உத்தரவுக்கமைய கண்டி நகருக்கு வெளியில் இருந்து பாதயாத்திரையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதயாத்திரை மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக மேற்படி நிகழ்வை இடை நிறுத்த உத்தரவிடுமாறு கண்டி பொலிஸார் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். இதனை ஆராய்ந்த கண்டி பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல,கண்டி நகரில் பாதயாத்திரை ஆரம்பிக்க தடை உத்தரவு பிறப்பித்ததோடு தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்வதில் தடையில்லை எனவும் அறிவித்தார். நகரினுள் பாதயாத்திரை செல்வதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக பாதயாத்திரைக்கு தடை விதிப்பதாகவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

கண்டி நகருக்கு காலை வரும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நோயாளிகள் போன்றோர் பாதயாத்திரையினால் இடையூறு மற்றும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதனை ஆராய்ந்து தடை உத்தரவை வழங்கிய நீதிபதி குறித்த உத்தரவை உடனடியாக கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரொஹான் ரத்வத்த மற்றும் திலும் அமுனுகம ஆகியோருக்கு இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.

இதேவேளை ஏற்கனவே திட்டமிட்டபடி கண்டியில் இருந்து மாவனல்லை வரும் பாதயாத்திரை 29ஆம் திகதி மாவனல்லையில் இருந்து நெலுந்தெனிய வரை பயணிக்கும். 30 ஆம் திகதி நிட்டம்புவவை வந்தடையும் பாதயாத்திரை மறுநாள் கிரிபத்கொடை ஊடாக கொழும்பை அடையும் என மஹிந்த ஆதரவு அணி தெரிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவங்ச, ஜோன்ஸ்டன் பெர்னாந்து, ரோஹித அபே குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, காஞ்சனி விஜேசேகர ஆகியோர் பாதயாத்திரையின் பிரதான அமைப்பாளர்களாக செயற்படுகின்றனர்.

இந்த பாதயாத்திரையில் 10 இலட்சம் மக்கள் பங்கேற்க இருப்பதாக டளஸ் அழகப் பெரும எம்.பி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (பா) 


Add new comment

Or log in with...