பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video) | தினகரன்


பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)

 

கபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது வெற்றிப் படமா? தோல்விப் படமா? இரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என பல கேள்விகளுக்கு இவை பதில்களாகவும் அமைகின்றன.

அந்த வகையில் காட்டூனிஸ்ட் பாலா தனது, பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரையும் கவர்ந்துள்ளது.

அவரது கருத்து...

மன்னிக்கவும்.. இது கபாலி பட விமர்சனம் அல்ல..!

    ``பறவையோட குணமே 
    பறக்குறதுதான்டா..
    அதை பறக்க விடு.. 
    வாழ்வோ சாவோ 
    அது பார்த்துக்கட்டும்.. 
    உன் கருணை அதோட 
    சாவை விட 
    கொடுமையானது..”

கபாலி படத்தில் ரஜினி பேசும் இந்த பிரமாதமான வசனத்தை கேட்டபோதே முடிவு செய்தேன்.. இந்த பதிவை இந்த வசனத்திலிருந்துதான் துவங்க வேண்டும் என்று.

முதலிலே சொல்லிவிடுகிறேன்.. கபாலி படு மொக்கைப்படம் என்றோ ஆஹா ஓஹோ என்றோ சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையிலான ஒரு நல்ல படம் அவ்வளவே.

அறிவுக்கொழுந்துகள் பலரும் கபாலி கதையை துவைத்து தொங்கவிட்டுவிட்டதால் நான் இங்கு பட விமர்சனம் எழுதப்போவதில்லை. படத்தையொட்டி கிளம்பிய கிளப்பிவிடப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு நுண்ணரசியல் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாராசூட்டில் குதித்து பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுவதுபோன்ற ரஜினியின் வழக்கத்திற்கு மாறான படம் கபாலி. ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதைக்கடந்து கேங்க்ஸ்டர் படங்களுக்கான மசாலா மிக்சும் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.

அந்த மசலாக்களை கடந்து, தன் மனைவி குழந்தையை தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும் உணர்வுகளையும் ரஜினியின் கண்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே அந்த பகுதிதான்.

அமிதாப் போன்று, தன் வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் இனி துணிந்து நடிக்கலாம் ரஜினி என்பதை ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சமீபகாலங்களில் பிற எந்த இயக்குனரும் பயன்படுத்தாத அளவுக்கு ரஜினியை ரஞ்சித் நடிக்க வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவும் ஓவர் கோட்டிங் இல்லாமல் இயல்பான வயதுகேற்ற முகத்தோற்றத்துடன் நடிக்க வைத்திருக்கிறார்.

அதேப்போல் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினியை கண்டதும் மனைவியாக வரும் ராதிகா வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படியே நம்மை உருக வைக்கின்றன.

மற்றபடி படம் முழுக்க வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் வரும் ``டுபிக்கோ.. டுபிக்கோ.. டுமில்’’ காமெடிகள்தான். திரைக்கதையில் ரஞ்சித் கொஞ்சம் கவனமாக இருந்து டிங்கிரி பிங்கிரி பண்ணியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடும்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்.

இனி முற்போக்கு மற்றும் பிற்போக்குகளின் முன்னரசியல் மற்றும் பிண்ணரசியல் குறித்து பார்க்கலாம்.

கலை மக்களுக்கானது என்பதை நம்பும் ஒருவன் தன் கலையை ஆயுதமாக பயன்படுத்துவான். அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற தன்னுடைய இரண்டு படங்களிலும் மிக வெளிப்படையாகதான் தலித் அடையாள அரசியலை பயன்படுத்தியவர் ரஞ்சித்.

அப்படி ஒரு அரசியல் பேசும், வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய ரஞ்சித் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் மீடியாக்கள் உட்பட எல்லோரின் கவனமும் அதில் குவிந்தது.

சேரியிலிருந்து ஒருவன் ஜீன்ஸ் பேண்டும் ஷூவும் போட்டுக்கொண்டு ஊர் வழியாக நடந்து செல்வதை விடுங்கள்.. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் செருப்பு போட்டுக்கொண்டு ஊருக்குள் நடந்து செல்வதையே ஜீரணிக்க முடியாத அளவுக்கு சமத்துவம் நிறைந்த சமூகம் நம்முடையது. ஆக வெளிப்படையாக தலித் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது சிலருக்கு தாங்க முடியாததாகவே இருந்திருக்கும்.

அவர் சார்ந்த அவரது வெற்றியை விரும்புபவர்கள் பலரும் அவரை வாழ்த்திக்கொண்டிருக்க அது சிலருக்கு பொசு பொசுவென்று எரியச்செய்தது. அதில் முற்போக்காளர் எனப்படுவோரும் உண்டு. சாதிவெறியர்களும் உண்டு.

இதை அம்பேத்கரின் வரலாற்றோடு இணைத்துப்பார்க்கலாம். அம்பேத்கர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் வெற்றிப்பெற்றதும் அவர் சார்ந்த சமூகம் அதை பெரும் விழாவாக எடுத்து கொண்டாடினார்களாம். ஏனெனில் முதல்முறையாக தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் பள்ளிப்படிப்பை முடித்து மேல் படிப்புக்கு தேர்வாகியிருக்கிறான் என்ற மகிழ்ச்சி.

அதைப்பார்த்து சாதி இந்துக்கள் எரிச்சலானார்களாம்.. எள்ளி நகையாடி சிரித்தார்களாம். அவர்கள் தலைமுறையில் பலரும் அந்த தேர்வை சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். இதெல்லாம் ஒரு விசயமா என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அது ஒடுக்குமுறைக்குள்ளான அம்பேத்கர்களுக்கு அது அசாதரணமான வெற்றி.

ரஞ்சித்துக்கு ரஜினிபோன்ற உச்ச நடிகரின் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததை அவரது நலம் விரும்பிகள் கொண்டாடியதை அம்பேத்கரின் வெற்றியை மஹர் இன மக்கள் கொண்டாடியதுபோல்தான் பார்க்க வேண்டும். அப்படியானால் ஒரு ரஜினி படத்தை இயக்குவதுதான் தலித் விடுதலையா என்று கேள்வி கேட்பது அபத்தமானது. அது ரஞ்சித்துக்கு தெரிந்த ஒரு கலை வடிவம்.

அடுத்து படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப். வழக்கமாக முதல்நாள் முதல் காட்சியில் தியேட்டரில் கொடி கட்டி விசில் அடித்து கொண்டாடி தீர்க்கும் ரசிகனை வெளியே நிற்க வைத்து கார்ப்பரேட்டுகளிடம் மொத்தமாக டிக்கெட் விற்றது என படத்தை விற்பதற்காக தயாரிப்பாளர் தாணு தரப்பு மற்றும் படத்தை வாங்கிய மன்னார்குடி கும்பலின் அட்ராஸிட்டி போன்றவை ஏகத்திற்கும் படத்திற்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவாக காரணமாக அமைந்தது.

மூன்றாவதுதான் மிக முக்கியமானது. படத்தில் ரஜினியின் வெளிப்படையான அடையாள அரசியலும் ஒரு சில காட்சிகளில் வரும் வசனங்கள் தான் இங்கு பொது சமூகத்திற்குள் ஒரு எரிச்சலை உண்டு பண்ணியது.

இந்த பொது சமூகத்திற்குள் சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். முற்போக்கு சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப இதை எதிர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த வன்மத்தைத்தான் படம் வெளியானதிலிருந்து இங்கு பலருடைய பதிவுகளில் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

அதே சமயம் அட்டக்கத்தியும், மெட்ராசும் வந்தபோது கொண்டாடியவர்கள் இன்று கபாலி சுமாரான படம் என்று சொன்னால் சாதிவெறியர்கள் என்று தலித் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விமர்சிப்பதும் எரிச்சலானது. கண்டிக்கப்பட வேண்டியது.

உண்மை என்னவென்றால் இது முழுக்க ரஜினி படமாகவும் இல்லை.. ரஞ்சித் படமாகவும் இல்லை. இந்த எதார்த்தத்தை ரஞ்சித் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

படத்தில் இன்னொரு குறிப்பிடும்படியான வசனம் இருக்கிறது. அது

    ``காந்தி சட்டையை கழட்டுனதுக்கும்.. 
    அம்பேத்கர் கோட் போட்டதற்கும் 
    பின்னாடி அரசியல் இருக்கிறது”

இந்த வசனமும் கபாலி மீதான வன்மத்திற்கு இன்னொரு கூடுதல் காரணம். ஆண்டப்பரம்பரை வசனம் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் திணிக்கப்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனால் இந்த வசனங்கள் படத்தில் ரஜினியின் விருப்பமில்லாமல் இடம்பெற்றிருக்க முடியாது. ரஜினிக்கும் ரஞ்சித்துக்குமிடையில் ஒரு மெல்லிய புரிந்துணர்வு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் தாக்கம் என்னவென்று தெரியாமல் ரஜினி பேசியிருக்க மாட்டார்.

பொதுவாக எம்ஜிஆர் படஙக்ளில் கவனித்துப்பார்த்தால் தெரியும். அவர் சேரியில் வளர்ந்திருப்பார். ஏழைகளுக்காக போராடுவார். ஆனால் க்ளைமாக்ஸில் அவர் ஒரு பெரும் ஜமீன் வீட்டு பிள்ளையாக இருப்பதாக படம் முடியும். அதாவது, அவர் சேரியில் இருந்தாலும் அவர் பிறந்தது உயர் குலத்தில் தான் என்று காட்சி வைப்பார்கள். இது ஒரு அரசியல் தந்திரம்.

ஆனால் இப்படியான தந்திரம் எதுவுமில்லாமல், தன் இமேஜ் குறித்து கவலைப்படாமல் ரஜினி ஒரு தலித் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது.

பொதுவாக ஊடகத்தில் கவனித்துப்பார்த்தீர்கள் என்றால், சாதி ஒழிப்பு குறித்து பேச ஒரு ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களைதான் பயன்படுத்துவார்கள். நம் ஊடக புலிகள் பயன்படுத்தும் தந்திரம் இது. அதாவது விடுதலை தேவைப்படுபவனை பேசவிடாமல், உனக்கான விடுதலையை நான் பேசுகிறேன்.. நீ அமைதியாக இரு.. என்று கூறும் தந்திரமது.

அப்புறம் கபாலி முழுமையாக தலித் மக்களின் வாழ்வியலை பேசிய படமா என்றால் நிச்சயமாக இல்லை. சாதி ஆதிக்கம் நிறைந்த திரைத்துறையில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து தன்னால் முடிந்த எதிர்ப்பரசியலை ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார்.

அதை ஆதரிக்கவில்லை என்றாலும் வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. ரஞ்சித் அம்பேத்கர் சேகுவேராவை செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்துவதாக போகிற போக்கில் நண்பர்கள் விமர்சித்துவிட்டு செல்கிறார்கள்.

நல்லது.. உங்களுக்கு திரைத்துறையில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் சாதி எதிர்ப்பு அரசியல், தலித் மக்களின் விடுதலை அரசியலை ரஞ்சித்தை விட நீங்கள் சிறப்பாக முழுமையாக பேசுங்கள்.

ஆனால் அதற்கு முன் சென்னைப்போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், நீங்கள் ஒரு தலித் என்று வெளிப்படையாக சொல்லி வாடகைக்கு வீடு வாங்கி அந்த வீட்டின் வரவேற்பரையில் நீங்கள் சொல்லும் செட் பிராப்பர்ட்டியான அம்பேத்கர் படம் ஒன்றை பெரிதாக மாட்டி வைத்து ஓராண்டு தலித்தாக வாழ்ந்துபாருங்கள்.. ரஞ்சித்துகளின் வலியும் கோபமும் புரியும்.

மீண்டும் இந்த வசனத்தை படித்துப்பாருங்கள்..

    ``பறவையோட குணமே 
    பறக்குறதுதான்டா..
    அதை பறக்க விடு.. 
    வாழ்வோ சாவோ 
    அது பார்த்துக்கட்டும்.. 
    உன் கருணை அதோட 
    சாவை விட 
    கொடுமையானது..”

இந்த வரிகளுக்குள் இருக்கும் அரசியல் இப்போது புரியும்..

ஆக அந்த மக்களுக்கு தேவை உங்கள் கருணை அல்ல.. ஓங்கி ஒலிக்கும் அவர்களின் நியாயமான குரலை காது கொடுத்து கேளுங்கள்.. 
அது உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணினாலும் கூட..

மகிழ்ச்சி..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
26-07-16


விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசுவின் கபாலி பற்றிய பதிவு...

கபாலி: எதிர் கலக நாயகன்!

மருது - இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி. கதாநாயகனின் அப்பத்தாவை வில்லன்கள் (அதே தேவர் சமூகம் தான்) தூக்கி வந்து விளக்கெண்ணெய்யை தலையில் ஊறவைத்து, அடித்து, ஐஸ் கட்டியில் உருகிய நீரில் மூழ்க வைத்து இளநீரை குடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டுக்குப்போன அப்பத்தா இரவில் வலிப்பு வந்து இறந்து போவார். 

அந்த படத்தில் படம் முழுக்க அவ்வளவு வன்முறைகள். வன்முறையின் உச்சமாக இந்த அப்பத்தா கொலைக்காட்சி ஒரு உதாரணம். இந்த படம் சமீபத்தில் வந்த படம் தான். தேவர் சமூகத்தில் நடக்கும் கதையாக அப்பட்டமாக பெருமை பேசியது. 

இந்த படமெல்லாம் வன்முறை படமாக தெரியவில்லை தினமணி நாளிதழுக்கு. அதே போல கொம்பன், தேவர்மகன், விருமாண்டி என வன்முறைகளை, கொலைகளை படம் முழுக்க காட்சிப்படுத்தும் எந்த திரைப்படமும் நம்ம தினமணிக்கு வன்முறை படமாக தெரியவில்லை. ஆனால், கபாலி மட்டுமே வன்முறை படமாக கண்டுபிடித்துள்ளது. பாவம் தினமணிக்கு இந்த சமூகத்தின் மீது தான் எவ்வளவு அக்கறை! பாட்சா திரைப்படத்தில் இல்லாத வன்முறையா? அப்போதெல்லாம் வருத்தப்படாத தினமணிக்கு இந்த கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கட்டவிழ்த்து விடவேண்டும்? அதுவும் கெட்ட கனவு என்று வேறு சாபம் விடுகிறது. நம்ம வைரமுத்து கூட கபாலி தோல்வி படம் என்று மகிழ்ச்சி அடைகிறார் .

ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்துக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் பாட்டெழுதி சம்பாதித்த நம்ம 'கவிப்பேர'அரசு இப்போது பாவம் சாபம் விடுகிறார். தினமணியாக இருக்கட்டும் அல்லது நம்ம வைரமுத்துவாக இருக்கட்டும் அல்லது இவரைப்போன்ற கபாலியை எதிர்ப்பவர்களாகட்டும் எல்லோருக்குமே ஒரே குறி இயக்குநர் ரஞ்சித் அவர்கள் தான்!

எதற்காக இந்த இயக்குநரை எல்லோரும் சபிக்கின்றனர்? ஒன்றும் இல்லை சபிக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததை தவிர வேறொன்றும் இல்லை. கதையைப் பற்றியோ, திரைக்கதையைப் பற்றியோ திறனாய்வு செய்ய வக்கற்றவர்கள் தான் இயக்குநரின் தொல்குடிபிறப்பை திறனாய்வு செய்து வன்மத்தை கக்குகிறார்கள். 

இலக்கியம் படைப்பதாக சொல்பவர்கள், சினிமாவுக்கு மொழி, சாதி, மதம் இல்லை என்று சொல்பவர்கள் எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் என்றுதானே பொருள். இதைத்தான் 'கவிப்பேர'அரசு வைரமுத்து உணர்த்துகிறார்.

சரி, கபாலி திரைப்படத்துக்கு வருவோம்!

சொந்த தமிழ் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து போகிற தமிழர்கள் மலேசியாவில் தோட்டங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். நாங்கள் அடிமையாக இருக்கமாட்டோம்- அத்துமீறுவோம் என்று கபாலி தலைமையில் போராடுகிறார்கள். 

தமிழர்களுக்கான டானாக உருவெடுக்கிறார் ரஜினிகாந்த்! நல்ல திரைக்கதை, வசனத்தோடு திரைப்படம் அப்படியே பரபரக்க வைக்கிறது. பொதுவாக புலம் பெயர்ந்து போகிறவர்கள் எல்லோருமே ஒரு சென்ட் நிலமுமற்ற விவசாய கூலிகள் தான். அவர்கள் தான் இலங்கை தேயிலைத்தோட்டத்துக்கும், மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கும் விரட்டப்பட்டார்கள். 

தமிழகச்சூழலில், நிலமற்றவர்கள் தலித்துகளாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கும். அடக்குபவர்களிடமிருந்து அடங்க மறுக்க வேண்டும் என்கிற போர்க்குணம் வெடிக்கும். அப்படித்தான் கபாலி தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடுகிறார். 

கங்காணியாய் இருப்பவன் எப்போதுமே முதலாளித்துவத்திற்கு எடுபிடி வேலை செய்து நம்முடைய இனத்தையே காட்டி கொடுப்பான். இங்கே கபாலிக்கு எதிராக வீரசேகரன் சீன டானுக்கு எடுபிடியாக இருக்கிறான்.

தமிழ்ச்சமூகத்தில் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டவன் சாதி இந்துவாகிறான். மனுதருமத்துக்கு எதிராக பவுத்தத்தை ஏற்று இந்துத்துவத்துக்கு எதிராக நின்று போராடுபவர்கள் தலித்துகளாக இன்று வரை ஒடுக்கப்படுகிறார்கள். 

இப்படி தான் வீரசேகரன்கள் தமிழகத்தில் ஒடுக்கபட்ட மக்கள் விடுதலைக்காக போராடும் கபாலிகளை அழிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூலிங்கிளாஸ் போட்டால் எரிகிறது. (இந்த இடத்தில் கூலிங்கிளாஸ், டி சர்ட், ஜீன்சு பேன்ட் போட்டு தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற வன்மத்தை நினைவில் கொள்க) கோட், சூட் போட்டால் எரிகிறது.

கபாலியை அழிக்க வரும் அந்த காட்சியில் கூட, முதலில் கூலிங்கிளாஸை பிடுங்கி காலில் போட்டு மிதித்து நொறுக்கி விட்டு, உனக்கெல்லாம் கோட் சூட் ஒரு கேடா என்று வீரசேகரன் கேட்பான். 

சீன வில்லனுக்கு இந்த உடை அரசியல் தெரியாது. ஆனால் சாதி இந்துவான வீரசேகரன்களுக்கு தலித்துகள் நல்ல உடை அணிந்தால் பிடிக்காது. அதை தான் இறுதி காட்சியில் கபாலி பேசுவார்,

    "நாங்க நல்ல உடை அணிஞ்சா உனக்கு எரியுது. கோட் சூட் போட்டா உனக்கு எரியுது.
    நான் கோட் சூட் போட்டா உனக்கு பிடிக்கலீனா, நான் போடுவேண்டா, கால் மேல கால்
    போட்டு உட்காருவது உனக்கு பிடிக்கலீனா அப்படித்தாண்டா உட்காருவேன். கோட் சூட்
    போடுவது உனக்கு எரியுதுனா அதுக்கு சாவுங்கடா"

என்று சொல்லுவது இந்த சமூகத்தை பார்த்து சொல்லுவதாகத்தான் பொருள்.
நீ ஜீன்சு, கூலிங்கிளாஸ் போடக்கூடாது என்றால் மீறி நாங்கள் போடுவோம். 

செருப்பு போட்டு பொது வீதியில் நடக்க கூடாது என்றால் அப்படித்தான் நடப்போம். பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்ககூடாது என்றால் மீறி எடுப்போம் என்கிற எதிர்ப்பு அரசியல் தான் இந்த உடை அரசியலும்! மற்றொரு இடத்தில் ஏன் எப்பொழுதும் கோட் சூட்டில் இருக்கிறாய் என்ற கேள்விக்கு 'இதுவும் ஒரு எதிர்ப்பு அரசியல் தான். காந்தி சட்டையை கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கு' என்பார் கபாலி.

மிக அழகாக, ஆழமாக எதார்த்தமாக இந்த உடை அரசியல் பேசப்பட்டிருக்கிறது.

சேரிகளில் கபாலி, மாரி, காளி என்று பெயர்கள் வைப்பார்கள். அதையே சினிமாக்களில் வில்லன்களுக்கு, வில்லன்களின் அடியாட்களுக்கு பெயர் வைப்பார்கள். அதே போல இசுலாமியர் என்றாலே தீவிரவாதியாக, வில்லன்களாக இந்த சினிமாக்காரர்கள் காட்டி ஒருவித வெறுப்பு அரசியலை விதைத்து வந்தார்கள். 

இயக்குநர் ரஞ்சித் கதாநாயகனுக்கு கபாலி என்று சூட்டி இருப்பது கூட பெயர் அரசியல் தான். கபாலிக்கு உறுதுணையாக வரும் அந்த அமீர் கதாபாத்திரம் கூட நடப்பு அரசியலை பிரதிபலிப்பதாகவே உள்ளது. (தலித்துகள் - இசுலாமியர் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவது என்கிற விடுதலைச்சிறுத்தைகள் அரசியல்) அமீர் என்பவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பவராக, கடைசிவரை நேர்மையும், விசுவாசமும் உள்ளவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.

ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் எதிர் கலக அரசியலை துணிச்சலாக பேசி இருக்கிறது. இயக்குநர் ஒரு தலித் என்பதால் காழ்ப்புணர்ச்சியில் எரிச்சலடைகிறார்கள் என்றால், கடைசி காட்சியில் திரு. ரஜினி பேசும் வசனம் தான் பதிலாக சொல்ல முடியும்.

    "எரியுதுன்னா.. சாவுங்கடா"

இப்படிப்பட்ட எதிர் கலக அரசியல் சார்ந்த திரைப்படங்கள் இனி நிறைய வர வேண்டும். திரைத்துறையில் பதுங்கி இருக்கும் தலித்துகள் துணிச்சலோடு, தமது அடையாளத்தோடு இப்படியான திரைப்படங்களை எடுக்க முன் வரவேண்டும். இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்த தமிழ்ப்புலி கலைப்புலி தானு அவர்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம். கபாலி திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி!

வன்னி அரசு.


 

இந்நிலையில் கபாலி படம் குறித்தான (விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய) கேள்விகளுக்கு அப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் இவ்வாறு பதில்  கூறுகிறார்.

 

[video:https://www.youtube.com/watch?v=3f9Bwxufcm0 width:673 height:380]

 

குறித்த படம் தொடர்பில் ப்ளு சேர்ட் என்பவர் வழங்கிய சர்ச்சைக்குரிய விமர்சனம் யூடியூப் தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

"கதை என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை...." என ஆரம்பிக்கும் அவ்விமர்சனம் இதோ....

 

[video:https://www.youtube.com/watch?v=amBGPnQwNqY width:673 height:380]

 

அவர் வெளியிட்ட விமர்சனம் தொடர்பில் ரஜினி இரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் அவரை திட்டி தீர்ப்பதோடு மட்டுமல்லாது, கேலி பண்ணியும் வருகின்றனர். அது தொடர்பான சில காட்சிகள்...

 

[video:https://www.youtube.com/watch?v=XJRldYjXERA width:673 height:380]

 


 

[video:https://www.youtube.com/watch?v=NxkiNJaOMtM width:673 height:380]

 


 

குறித்த விமர்சனங்கள் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித்.....

 

[video:https://www.youtube.com/watch?v=QH6ZTw7iKOI width:673 height:380]


 

இது இவ்வாறிருக்க, சுகவீனம் காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது இரசிகர்களுக்கு, படம் வெற்றி பெற்றமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், அதற்கு தனது நன்றிகளை தெரிவித்து, தனது கைப்பட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக்கடிதம்....


Add new comment

Or log in with...