முதலாளிமார் சம்மேளனத்துக்கு பிரதமர் அவசர அழைப்பு | தினகரன்


முதலாளிமார் சம்மேளனத்துக்கு பிரதமர் அவசர அழைப்பு

(மகேஸ்வரன் பிரசாத்)

அலரி மாளிகையில் இன்று பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் தீர்வுகாணும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சின் அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். தனியார் துறையினருக்கு வழங்கும் 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்குவது தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் இதில்எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனை வழங்குவது குறித்து பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதனால் சம்பள உயர்வை வழங்குவது சிரமம் என முதலாளிமார் சம்மேளனத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனையடுத்து சம்பள உயர்வை வழங்குவதற்காக திறைசேரியூடாக குறிப்பிட்ட தொகை பணத்தை கம்பனிகளுக்கு கடனாக வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்ததுடன், இதற்கான பணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறைசேரியினால்அனுமதிக்கப்பட்டது. எனினும், சம்பள அதிகரிப்பை வழங்க முதலாளிமார் சம்மேளனம் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. 

சம்பள அதிகரிப்பை வழங்க திறைசேரி ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்புத் தொடர்பில் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கடந்தவாரம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். சம்பள அதிகரிப்பு வழங்குவதிலிருந்துதோட்டக் கம்பனிகள் தப்பிக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதேவேளை. தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் திகாம்பரம்​ நேற்று நண்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். 
2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் வகையில் திறைசேரி போதிய நிதி வழங்கியும் தோட்ட கம்பனிகள் இன்னும் அதனைச் செய்யவில்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பிரதமரிடம் தான் கூறியதாக திகாம்பரம் தினகரனுக்குக் கூறினார்.
 
இதற்குப் பதிலளித்த பிரதமர் முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று பேசி உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாரென்றும் திகாம்பரம் தெரிவித்தார். 

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார். 

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய சம்பள அதிகரிப்பு விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Add new comment

Or log in with...