குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை நியூயோர்க் மாநில உறுப்பினர் டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

அக்கட்சி சார்பில் அவருடன் மேலும் டெட் கிரஷ், மார்கோ ருபியோ, ஜோன் கெசிஸ் ஆகிய மூவர் போட்டியிட்டிருந்தனர். இதில், ஏனைய இருவரிலும் பார்க்க டெட் கிரஷிற்கு ஓரளவான ஆதரவு கிடைத்திருந்தது.

அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் 2,472 பேரில் 1,237 பேரின் வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக களமிறங்க முடியும் எனும் நிலையில் ட்ரம்ப் 1,441 வாக்குகளைப் பெற்று அவ்வாய்ப்பை பெற்றார். (டெட் கிரஷ் -551)

இதேவேளை, ட்ரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கும் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜனநாயகக் கட்சி சார்பில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நியூயோர்க் மாநிலத்திலிருந்து தெரிவான உறுப்பினரான ஹிலாரியை எதிர்த்து, பேர்னி சாண்டர்ஸ் போட்டியிட்டிருந்தார்.

மொத்தமாக 4,765 பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியிலிருந்து 2,383 பேரின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் அக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் எனும் நிலையில், ஹிலாரி 2,764 வாக்குகளை பெற்று, அவ்வாய்ப்பை தனதாக்கிக் கொண்டதோடு, பேர்ணி 1,894 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...