வேத சாட்சியான புனித மரியகொரற்றி | தினகரன்


வேத சாட்சியான புனித மரியகொரற்றி

 

நாம் ‘இளைஞர்களின் புரட்சி யுகத்திலிருக்கின்றோம். உலகம் முழுவதுமே இளைஞர்கள் வழிதவறிப் போவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் சென்ற நூற்றாண்டின் தொடக்க நாட்களில் இத்தாலியில் உரோமையை அண்டிய கிராமம் ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.

அன்று ஜுலை மாதம் 5 ஆம் திகதி. ஆண்டு 1902. தம் தாயார் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

வீட்டில் இளைய சகோதரி சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தாள். அவர்களும் ஒரு காலத்தில் சொந்தமாகத் தனி வீட்டில் வசித்தவர்கள் தாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை லூயிஜி காச நோயினால் மரித்துவிடவே இப்படி இன்னொரு குடும்பத்துடன் அண்டி வாழும் நிலை ஏற்பட்டது.

அப்போது மரியா தனியாகவே வீட்டில் இருக்கிறாள் என்பதை நன்கறிந்து வைத்திருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த அலெக்சாந்திரியோ திடுதிப்பென அறைக்குள் நுழைந்தான். அவனது காம வெறி கட்டு மீறிச் சென்றிருந்தது. மரியாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் கண்களைக் கட்டிப் போட்டிருந்து. அவனுடைய எண்ணத்தை அறிந்த மரியா அதற்கு உடன்படவில்லை. இது கடவுளின் பார்வையில் ஒரு சாவான பாவம் என எடுத்துரைத்தாள்.

தனது தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ள போராடினாள். இறுதியில் அலக்சாந்திரியோ அவளைப் பதினான்கு முறைகள் கூரிய கத்தியினால் குத்திக் குதறினான். இரத்த வெள்ளத்தில் கிடந்த மரியாவைக் காப்பாற்ற உடனடியாக அங்கு எவரும் வரவில்லை. வயல் வேலை முடிந்தபின் தாயார் அங்கு வந்தபோது இந்நிலையைக் கண்டு பதைபதைத்தாள். உடனே அண்மையில் உள்ள உள்ளூர் மருத்துவ மனைக்கு இவளைக் கொண்டு சென்றார்கள். ஆனால் அ ப்போது கால தாமதமாகியிருந்தது. வைத்தியர்கள் போராடியும் மரியாவைக் காப்பாற்ற முடியவில்லை.

மறுநாள் அவளுக்கு மயக்க மருந்தின்றியே சத்திர சிகிச்சை நடைபெற்றது. பயங்கர நோவை அவள் தாங்கிக்கொண்டாள். அவளைக் கவனித்த தாதி, “மரியா, நம் இருவரில் நீதான் முதலில் மோட்சம் போகிறாய்” என்றார். முதலில் அதை சரியாக மரியா புரிந்து கொள்ளாவிட்டாலும் தாம் இறக்கப் போவது உறுதி என அறிந்து கொண்டாள். அந்த வேதனை மிக்க நேரத்திலும் அவள் அலெக்சாந்திரியோவை மன்னிக்கவே செய்தாள். மறுநாள் ஜுலை 6 ஆம் திகதி அவர் ஆவி பிரிந்தது.

தன் கற்பைக் காத்துக்கொள்ள, இறைவனின் வழிகளிலிருந்து திரும்புவதைவிட தன் உயிரையே கொடுப்பது மேல் எனக் கருதிய மரிய கொரற்றி ஒரு மறைசாட்சியாகக் கருதப்படுகின்றார் கிறிஸ்தவ மதத்தை விட்டுக் கொடுக்காமல் அதற்காக தன் உயிரை இழப்பது மட்டும்தான் வேத சாட்சியின் அடையாளமா? இல்லை.

இறைவனின் ஒவ்வொரு கட்டளையையும் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகின்ற ஒவ்வொருவருமே வேத சாட்சிகள்தான். சிறையில் தள்ளப்பட்ட அலக்சாந்திரியோ மனம் திரும்பினான்.

இறுதியில் தன் வாழ்நாள் முழுவதும் ஒப்புக்கொடுத்து ஒரு தியான மடத்தில் அருட்சகோதரராக அவன் சேர்ந்தான்.

1970 ஆம் ஆண்டு அவன் மரிக்கும் வரை தன் ஆன்மாவைக் கறைபடாமற் காத்துக்கொண்டான். 1950 ஆம் ஆண்டு மரிய கொரற்றிக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. பன்னிரண்டாம் பத்திநாதர் பாப்பரசர் அதனை அறிவிக்கும் வேளையில் அலெக்சாந்திரியோ அங்கிருந்து இறைவனுக்கு நன்றி கூறினான். (ஸ)


Add new comment

Or log in with...