உறுதியான விசுவாசம் ஒருபோதும் கைவிடாது | தினகரன்


உறுதியான விசுவாசம் ஒருபோதும் கைவிடாது

 

கொழும்பு உயர் மறை மாவட்ட மக்கள் மடு மாதாவிற்கு கொழும்பில் திருவிழாவெடுத்து மகிழ்வது தொடர்கிறது. யுத்த சூழலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடு வருடந்தோறும் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. கடந்த வௌ்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கொழும்பு புதுக்கடை நன்மரண மாதா ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் முதல் நாள் நவநாள் திருப்பலி மறையுரையின் போது அருட் தந்தை ஜோய் மரியரட்ணம் வழங்கிய மறையுரை இது.

நற்செய்தியில் புனித யோவான் மரியன்னையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மரியன்னையை எமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கானாவூர் திருமணத்தில் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஒருவராக மரியன்னை காட்டப்படுகிறார். மக்களின் தேவைகளை அறிந்து கொண்ட அவர் அவர்களுக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி தேவையை நிவர்த்தி செய்வதை இந்த நிகழ்வில் அறிய முடிகிறது.

நற்செய்தியில் புனித யோவான் 19 வது அதிகாரத்தில்; இயேசு அன்னை மரியாளை யோவானின் கரங்களில் ஒப்படைத்து “இதோ உன் தாய்” என தெரிவிக்கிறார். தேவையறிந்து உதவுகின்ற தாய் ஒருவர் ஆண்டவர் இயேசுவினால் எமக்குத் தரப்படுகிறார்.

மரியன்னை எப்போதும் எமது தேவையையறிந்து கொண்டவராக அதற்காக ஆண்டவரிடம் மன்றாடும் ஒருவராக உள்ளார். நாம் மரியன்னையின் பேரில் திருவிழாக்களைக் கொண்டாடும் போது இத்தகைய ஒரு அன்னையை எமக்குப் பெற்றுத் தந்ததற்காக நன்றி கூறுகின்றோம் என்பதை நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசுவே இத்தகைய ஒரு அன்பான அம்மாவை எங்களுக்குத் தந்தமைக்காக நன்றி கூறுகின்றோம் என்பதே எமது மன்றாட்டாக இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையே திருவிழாக்கள் எமக்கு வழங்குகின்றன.

மரியன்னையை விசுவாசிக்கின்ற மக்களாக நாம் இருக்கின்றோமா? என்பதும் எம்முன் உள்ள மற்றுமொரு பிரச்சினை. மரியன்னையின் பலத்தையும் நம்பிக்கையையும் தெரிந்துகொண்டுள்ள நாம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பலவீனமடைந்துள்ள போது மரியன்னையின் தலையீட்டைத் தவிர்த்து வேறு எங்கோவெல்லாம் செல்வதையே காண முடிகின்றது.

எனினும் ஏனைய மக்கள் வேறு மதத்தினர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் மரியன்னையை வேண்டி அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதைக் காண முடிகிறது.

நான் அண்மையில் நீர்கொழும்பு பகுதியில் ஒரு பயணம் செல்லவேண்டியிருந்தது. மாலை நேரமாகையால் வாகனங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. நான் எதிர்பாராத வேளையில் ஒரு சொகுசு பஸ் என் அருகில் வந்து நின்றது. அதன் சாரதி என்னை அந்த பஸ்ஸில் ஏறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பஸ்ஸில் வேறு யாரும் பயணிகள் இல்லாததால் நானும் சிறிது அச்சத்துடனேயே பஸ்ஸில் ஏறினேன். அந்த சாரதி தமக்கருகிலுள்ள ஆசனத்தில் என்னை அமர சொன்னார். நான் சற்று அச்சத்துடனேயே அந்த ஆசனத்தில் அமர்ந்தேன்.

அந்த சாரதி பல விடயங்களை என்னோடு பேசிக்கொண்டு வந்தார். எனினும் நான் ஒரு குருவானவர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. மிகவும் வற்புறுத்தி நான் யார் என்பதை அவர் அறிந்துகொள்ள முயன்றபோது நான் ஒரு குருவானவர் என்பதை அவருக்குக் கூற வேண்டியிருந்தது. அவர் ஒரு பௌத்தர். வருடா வருடம் மடு திருத்தலத்துக்கு திருவிழாக் காலத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் பணியை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மடு ஆலயத்தில் தங்கியிருக்கும் போது தாமும் மடு அன்னையை வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். கத்தோலிக்க மக்கள் தமது வேண்டுதலை முழந்தாழ் படியிட்டு மேற்கொள்வதை நாம் மிகவும் கவனமாக அவதானித்து வருவதாகவும் நாளடைவில் தாமும் அவ்வாறு மாதாவின் முன் முழந்தாற்படியிட்டு தமக்குத் தெரிந்த விதத்தில் மன்றாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் சொல்லப் போகின்ற விடயத்தை நான் மிக ஆவலாக கேட்கத் தயாரானேன். ஒரு முறை மடு யாத்திரை முடிந்து இரவில் திரும்புகையில் ஒரு காட்டுப் பகுதியில் வைத்து தமது சொகுசு பஸ்ஸில் ‘கரண்ட் கட்டாகி’ விட்டதாகவும் தாம் எவ்வளவோ முயன்றும் அதை சரிசெய்ய முடியாமற் போனதாகவும் அதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் தம்மை மோசமாகத் திட்டியதாகவும் குறிப்பிட்ட அவர், அப்போது தமக்கு மடு அன்னையின் ஞாபகம் வந்ததாகவும் தமது பிரச்சினையை அவரிடம் மனதால் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சில நிமிடங்கள் கழிந்ததும் வெள்ளை உடை தரித்த ஒருவர் அந்த பஸ் வண்டிக்கருகில் வந்துள்ளார். சாதாரண வழிப்போக்கரைப் போல வந்த அவர். பஸ்ஸுக்கு என்ன நடந்தது என சாரதியிடம் கேட்டுள்ளார். சாரதியும் நடந்ததைக் கூற வந்தவர் சாரதியில் ஆசனத்தில் அமர்ந்து விட்டு கீழிறங்கியுள்ளார்.கீழே இறங்கியவர் இப்போது பஸ்ஸை ஸ்டார்ட் செய்து பாருங்கள் என கூறியுள்ளார். பல தடவைகள் பல விதமாக முயற்சி செய்த சாரதி; அலட்சியமாக சரி இன்னுமொரு தடவை அவர் கூறியதற்காகப் பார்ப்போமே என்று பஸ்ஸை ‘ஸ்டார்ட்’ செய்துள்ளார். என்ன ஆச்சரியம் பஸ் ஸ்டார்ட் ஆகியதுடன் ‘பவர் கட்’டும் சரியாகிவிட்டது.

இந்த அற்புதமான அனுபவத்தை அந்த சாரதி தம்மிடம் பகிர்ந்து கொண்டதாக குருவானவர் தெரிவித்தார்.

பஸ் வண்டிக்குப் பிரச்சினையாகிய போது மூன்று தினங்கள் மடு ஆலயத்தில் இருந்து விட்டு வந்த கத்தோலிக்க விசுவாசிகள் பிரச்சினை தீர ஒரு செபம் கூட செய்யவில்லை. எனினும் ஒரு பௌத்தர் மரியன்னையை விசுவாசத்தோடு; மனதிற்குள் நினைத்த போது அங்கு அற்புதம் நடந்தது.

இன்றும் நம்மில் பலர் கத்தோலிக்கர்களாயிருந்தும் இறைவன் மீதும் அல்லது மரியன்னை மீதும் அவரது பரிந்துரை மீதும் முழுமையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதில்லை. அதனால் தமது பிரச்சினைகளை சுமந்துகொண்டே வாழ்கின்றனர் என மறையுரையை நிறைவு செய்தார் அருட்தந்தை.

மடுத் திருப்பதியிலுள்ள மடு அன்னைக்கு கொழும்பில் திருவிழா எடுத்து மகிழும் நாம் மரியன்னை மீதும் அவரது பரிந்துரை மீதும் எந்தளவு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்துள்ளோம்? நாம் செபிக்கும் செபமாலை மீது நாம் எந்தளவு நம்பி்க்கைகொண்டுள்ளோம். என்பதற்குச் சவாலாக அமைந்தது குருவானவர் கூறிய சாரதியின் அனுபவம்.

எல்.செல்வா...

 


Add new comment

Or log in with...